நாகலாந்தின் பா.ஜ.க தலைவர் பெஞ்சமின் யெப்தோமி, கோஹிமாவில் ‘நாடு முழுவதும் பசுவதைத் தடையை ஊக்குவிக்கும் வகையில், கௌ த்வஜ் ஸ்தாபன பாரத யாத்திரை’ நடத்த திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக பல்வேறு பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்த யாத்திரைக்கு நாகலாந்தில் பா.ஜ.க கூட்டணியுடன் ஆட்சியில் இருக்கும் என்.டி.பி. கட்சியின் மூத்த தலைவர் நெய்பியூ ரியோ தலைமையிலான அமைச்சரவை அனுமதி மறுத்திருக்கிறது.
இது தொடர்பாக அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலோங், “நாகர்களின் மத, சமூக நடைமுறைகள், நாகா மரபுச் சட்ட நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காகவும், பல்வேறு சிவில் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் எதிர்ப்பின் அடிப்படையிலும், பொது ஒழுங்கை பேணவும், மக்களின் நலன் கருதி ‘கௌ த்வஜ் ஸ்தாபன பாரத யாத்திரை’க்கு அனுமதி வழங்கக்கூடாது என அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, நாகலாந்தின் ஃபெக் மாவட்ட பா.ஜ.க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “நமது மதிப்பிற்குரிய மாநிலத் தலைவர் பெஞ்சமின் யெப்தோமியால் முன்மொழியப்பட்ட ‘கௌ த்வஜ் ஸ்தாபன பாரத யாத்திரை’க்கு எதிராக, நாகலாந்து அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு Phek மாவட்ட பா.ஜ.க முழு ஆதரவை வழங்குகிறது. பசுவை தேசத்தின் தாயாக அறிவிக்கவும், பசு வதையைத் தடை செய்யவும் முயலும் பா.ஜ.க அமைப்பின் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், நாகர்களின் கலாச்சாரம் மற்றும் உணவுத் தேர்வுகளில் நேரடியாக தலையிடுகிறது. மேலும், இந்த சமூகத்தின், நம் குடும்பத்தின் ஒரு அங்கமான தாய்மார்களை விலங்குடன் ஒப்பிடுவது, அவர்களை முற்றிலும் அவமதிப்பதாகும்.
நாகா மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் எந்தவொரு முயற்சியும் சர்வாதிகாரம் மட்டுமல்ல, நமது கலாச்சார, பாரம்பரியம் வாழ்க்கை முறைக்கு அவமரியாதை செய்வதாகும். நாகா மக்களின் பழக்கவழக்கங்கள், மரபுகளில் எந்தவொரு வலுக்கட்டாய திணிப்பும், மாற்றமும், நாகர்கள் தலைமுறைகளாக போற்றி வரும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. எனவே, முன்மொழியப்பட்ட யாத்திரை, இந்தியா கொண்டாடும் பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மை உணர்வைக் கடுமையாக பாதிக்கும்.
இதுபோன்ற பிளவுபடுத்தும் திட்டங்களுக்கு எதிராக மாநில அரசு உறுதியாக நிற்கவும், நாகாலாந்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும் ஃபெக் மாவட்ட பா.ஜ.க வலியுறுத்துகிறது. மேலும், நாகாலாந்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட எந்தவொரு திட்டமும், கொள்கையும், நாகாக்களுக்கும், பல தலைமுறையாக ஒன்றாக வாழும் பிற சமூக மக்களுக்கும் இடையே மனக்கசப்பையும்,சச்சரவுகளையும் வளர்ப்பதற்கு முன், அது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் விழிப்புடன் இருக்குமாறும், நமது வாழ்க்கை முறையை மாற்றும் இத்தகைய முயற்சிகள் அமைதியான, அதே நேரம் ஒற்றுமையான முறையில் எதிர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இதற்கிடையில், பிரதமர் மோடி வசித்து வரும் பிரதமர் இல்லத்தில், பசுமாடு ஒன்று கன்று ஈன்றதாக செய்தி வெளியானது. மேலும், பிரதமர் மோடி அந்தக் கன்றுக்குட்டியுடன் வீடியோ எடுத்து, அதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த கன்றுகுட்டிக்கு தீபஜோதி எனப் பெயரிட்டு, அதற்குப் பொன்னாடை போர்த்தி, மாலையிட்டு தூக்கிக் கொஞ்சும் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
கன்றுகுட்டியுடன் பிரதமர் மோடி இருக்கும் அந்தப் புகைப்படத்தையும், நாகலாந்தின் ஃபெக் மாவட்ட பா.ஜ.க-வின் அறிக்கையையும் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், “ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்… யாரை முட்டாளாக்குகிறார்கள்” என விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகிவருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY