விசிக மது ஒழிப்பு மாநாடு: ‘அழையா விருந்தாளியா? அதிமுக-வுக்கு செக்கா?’ – திமுக-வின் திட்டம் என்ன?

அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்றும் மது ஒழிப்பு கோரிக்கை கூட்டணியைப் பாதித்தாலும் பரவாயில்லை என்றும் பேசிவந்த வி.சி.க., தலைவர் திருமாவளவன் முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு `கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை’ என்று கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. திருமாவளவன் – முதல்வர் சந்திப்பு பின்னணி குறித்து விசாரித்தோம்.

வி.சி.க., மாநாட்டில் அ.தி.மு.க., பங்கேற்கலாம், அதிகாரப் பகிர்வே உண்மையான ஜனநாயகம் எனப் பேசி தி.மு.க கூட்டணிக்குள் நெருப்பைப் பற்ற வைத்தார் திருமாவளவன். இந்த பரபரப்புக்கு மத்தியில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திருமாவளவன் சந்திப்பு நடந்தது. கூட்டணி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இச்சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன்

“முதல்வருடனான இச்சந்திப்பை ஒருங்கிணைத்ததே தி.மு.க தரப்புதான்” எனப் பேச ஆரம்பித்த வி.சி.க., மாநில நிர்வாகிகள், “நாங்கள் திருவாரூரில் மாநாடு தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தபோது முதல்வர் எங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்றதும் அதற்கு இசைவு தெரிவித்து, `மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்,

மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்க தி.மு.க வலியுறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகளோடு முதல்வரைச் சந்தித்தார் திருமா. சந்திப்பின்போது முதல்வரின் வெளிநாடு பயணக் குறித்த பேச்சுடன் தொடங்கி மெல்ல மெல்ல மது ஒழிப்பு மாநாட்டு குறித்தும் பேச ஆரம்பித்தனர். எங்கள் தரப்பிலிருந்து மாநாட்டில் பங்கேற்க தி.மு.க-வுக்கு எந்த அழைப்பும் விடுக்காமலேயே ஆர்.எஸ் பாரதி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்பர் என முதல்வர் சொன்னதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” என்றனர்

திருமாவளவன், ஸ்டாலின்

வி.சி.க.,-வின் அழைப்பை எதிர்பார்க்காமலேயே மது ஒழிப்பு மாநாட்டுக்குப் பிரதிநிதிகளை அனுப்ப முதல்வர் முடிவெடுத்தது அ.தி.மு.க-வை மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுப்பதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

“மது ஒழிப்பு விவகாரத்தில் மறைமுகமாக திருமா சாடுவதும், ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கேட்பதையும் தி.மு.க., துளியும் ரசிக்கவில்லை. திருமாவின் அழைப்பையேற்று ஒருவேளை அ.தி.மு.க., மாநாட்டில் பங்கேற்றுவிட்டால் அது அரசியல் சூழலையே மாற்றிவிடுமெனக் கணித்த தி.மு.க., தலைமை, திருமாவை அழைத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

கோரிக்கைக்குச் செவி சாய்க்கிறோம், பிரதிநிதிகளை அனுப்பி மாநாட்டு ஆதரவளிக்கிறோம் எனச் சொல்லிவிட்டதால் அ.தி.மு.க.,வை அழைக்க முடியாத நிர்ப்பந்தம் வி.சி.க-வுக்கு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க.,வின் இந்த சாமர்த்திய நகர்வு வி.சி.க., பற்ற வைத்த நெருப்பை ஊதி அணைத்திருக்கிறது எனலாம். இச்சூழலில் அ.தி.மு.க., எப்படிக் கையாளப் போகிறதென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி

மது ஒழிப்பு மாநாட்டு மேடையில் யாரெல்லாம் இருப்பார்கள் எனச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது திருமாவளவனிடமே கேட்டோம். “நாங்கள் தி.மு.க.,வை மாநாட்டுக்கு அழைக்கவில்லை, ஆனால் அவர்கள் பங்கேற்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதனை அ.தி.மு.க., எப்படிப் பார்க்கிறதெனத் தெரியவில்லை. எனவே மாநாட்டில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பதைக் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.” என்றார்.

என்ன முடிவெடுக்கப்போகிறார் எடப்பாடி என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.