முதலமைச்சர் கோப்பை: `போட்டி நேத்தே முடிஞ்சிருச்சு கிளம்புங்க’ – ஏமாந்த போட்டியாளர்கள்; நடந்தது என்ன?

ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் 53 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், திருவள்ளூர் மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் 11 தேதி முதல் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர்

இவ்வாறிருக்க, செப்டம்பர் 16-ம் தேதி திருநின்றவூர் ஆக்சுபோர்டு (Oxford) பள்ளி வளாகத்தில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்குச் சதுரங்க போட்டி நடைபெறும் எனப் போட்டி அட்டவணையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று விளையாட்டு வளாகத்துக்குப் போட்டியாளர்கள் வந்தபோது அதிர்ச்சியூட்டும் விதமாக, ‘போட்டி இங்கு நடைபெறவில்லை, திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில் நடைபெறுகிறது. அங்குச் செல்லுங்கள்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

இருப்பினும், கடைசி நிமிடத்தில் சொல்கிறார்கள் என்று சலித்துக் கொள்ளாமல், போட்டியாளர்களும் உடன் வந்த பெற்றோர், ஆசிரியர்களும் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு வளாகத்துக்கு விரைந்தனர். அங்குச் சென்று அவர்கள் கேட்டதற்கு அங்கிருந்தவர்கள், “சதுரங்க போட்டி நேற்றே முடிந்துவிட்டது. இன்றைக்கு எந்தப் போட்டியும் இல்லை” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். முதலில், இவ்வாறு தேதிகள் மாற்றப்படுகிறதென்றால் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் அத்தகைய அறிவிப்புகளும் வரவில்லை, போட்டியாளர்களின் கேள்விக்குச் சரியான பதிலும் தெரிவிக்கவில்லை.

திருவள்ளூர்

இது குறித்துப் பேசிய போட்டியாளர் ஒருவர், “நாங்க காலைலயே கிளம்பி வந்தோம். முதல்ல ஆக்ஸ்போர்ட் ஸ்கூல்க்கு போக சொன்னாங்க. அங்க போனா வேற இடத்துல நடக்குதுன்னு சொன்னாங்க. அங்க போனா, `போட்டியெல்லாம் நேத்தே முடிஞ்சிருச்சு, கிளம்புங்கன்’னு சொல்லிட்டாங்க. இப்டி தேதி மாத்திருக்கோம்னு முன் அறிவிப்பு எதுவுமே எங்களுக்கு வரல. இப்போ கூட சி.எம் ட்ராஃபி வெப்சைட்ல ஸ்கூல் லெவல் போட்டி 16-ம் தேதினுதான் இருக்கு. ஆனா நேத்தே முடிஞ்சிப்போச்சுனு சொல்றாங்க. என்ன பண்றதுனு தெரியல” என்றார்.

அதேபோல் இன்னொரு போட்டியாளர், “இவங்க தேதி மாத்துனது பிரச்னை இல்லை. ஆனா அத முறையா அறிவிச்சிருக்கணும். இப்போ நாங்க அதுக்காகத்தான் பேசுறோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் பேச முயன்றபோது, யாரும் சரியாகப் பதில் அளிக்கவில்லை. இறுதியில், போட்டியில் கலந்துகொள்ள வந்த போட்டியாளர்கள், அவர்களுடன் வந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பேச முடிவு செய்திருக்கின்றனர்.

திருவள்ளூர்

இந்த தேதி மாற்றம் குறித்த செய்தி திருவள்ளூர் மாவட்ட இணையத்தளத்தில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், போட்டியாளர்களுக்கு முறையாகச் செய்தி சென்றடையவில்லை எனப் பலரும் அதிருப்தி தெரிவிக்கிறனர்.