”நாங்கள் எல்.கே.ஜி, பா.ம.க பிஹெச்டி”- தஞ்சாவூரில் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கூறியதாவது, “மது ஒழிப்பில் பா.ம.க பி.ஹெச்.டி முடித்திருப்பதாகவும், திருமாவளவன் இப்போதுதான் எல்கேஜி வந்திருப்பதாகவும் பா.ம.கவினர் சொல்கிறார்கள். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் எல்கேஜிதான். பா.ம.க பிஹெச்டி தான். ரொம்ப மகிழ்ச்சி. பா.ம.க-வுடன் எங்களுக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. சேர்ந்து செயல்பட முடியாத நிலைக்கு அவர்கள்தான் எங்களை தள்ளிவிட்டனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பில்லாத சூழல். பாமகவை இழிவுப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை.

தொல்.திருமாவளவன்

நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் பிரச்னை இல்லை. இது அனைவருக்குமான பிரச்னை. அனைவரும் பங்கேற்கலாம் என்று தான் அழைப்பு விடுத்தோம். பங்கேற்பதும், பங்கேற்றகாததும் அவரவர் விருப்பம். மதுவிலக்கு மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வரத்தான் செய்யும். எங்கள் நோக்கத்தில் எவ்வித கலங்கமும் இல்லை. கலங்கம் கற்பிக்க பலரும் முயற்சிக்கிறார்கள். அதை நாங்கள் பொருட்படுத்த விரும்பவில்லை.

மதுவிலக்கு மாநாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. பொதுவான அறைகூவல் தான் விடுத்துள்ளோம். கட்சியின் முன்னணி தலைவர்களுடன் கலந்து பேசி இரண்டொரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும். மதுக்கடைகளுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து குரல் எழுப்புவார்கள். மதுக்கடைகள் இருக்கட்டும் என்று எந்தக் கட்சியும் சொல்வதற்கு வாய்ப்பில்லை. மதுவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. அனைவரும் ஒருமித்த கருத்தில் இருக்கும் போது ஏன் சேர்ந்து குரல் கொடுக்கக் கூடாது, அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மதுக் கடைகளை மூட முடியும்” என்றார்.