பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தியும், பதிவுகளை பதிவிட்டும் வருகின்றனர்.
அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.
இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.
அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.
இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக” என்று ஒரு வீடியோ பதிவை ஷேர் செய்திருக்கிறார்.
அந்த வீடியோவில் அவரது அக்கா, “நீ ஏதோ ஒரு ஷோ-ல சொல்லியிருந்த…நான் கருணாநிதி, எம்.ஜி.ஆர், காமராஜர், பக்தவத்சலம் எல்லா சி.எம்மையும் பாத்துருக்கேன். ஆனால் அண்ணாவை பாத்ததில்லை. டைரக்டர் சக்தி தான் சொல்லியிருக்காருனு சொல்லியிருந்த. ஆனா அது இல்ல…உனக்கு நியாபகம் இருக்காது. நீ மூணு வயசு சின்ன குழந்தையா இருக்கும்போது அவரு மடிலேயே ஏறி உக்கார்ந்திருக்க.
1958-னு நினைக்குறேன். அப்பா எப்பவும் குற்றால சீசன்ல மாடி மாதிரி ஒரு கெஸ்ட் ஹவுஸ் வாடகைக்கு எடுத்து எல்லாரையும் கூட்டிட்டு போவாரு. அம்மா, அண்ணினு எல்லாரும் சமையல் பாத்திரங்கள் எடுத்துட்டு போய் அங்கேயே சமைப்பாங்க. இவங்களுக்கு உதவியா புலியார்-ங்கறவரு இருப்பாரு. அவருக்கு அவங்களுக்கு உதவியா இருக்கறதை விட, உன்னை பாத்துக்கறதே பெரிய வேலை.
ஒரு நாள் நீ காணாம போய், உன்னை அரை மணி நேரம் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரும்போது “சின்னய்யா என்ன பண்ணாரு தெரியுமா? கீழ திமுக கூட்டம் நடந்துட்டு இருக்கு. இவரு பாட்டுக்கு அங்க உள்ள நுழைஞ்சு, அண்ணாதுரை மடியில ஏறி உக்காந்துட்டு இருந்தாரு”னு சொன்னாரு.
எனக்கு ஏன் அது இப்பவும் நியாபகம் இருக்குனா, ‘என் பையன் அண்ணாதுரை மடியில உக்காந்ததும் உக்காந்தான். அவரை மாதிரியே பேச்சு அதிகமா இருக்கு’னு அம்மா அடிக்கடி பெருமையா சொல்லுவாங்க” என்று அந்த வீடியோ முடிகிறது.