“அதிமுக கரைவேட்டி தான் கட்டுகிறேன்… முடிந்தால் வழக்கு போடுங்கள்..” – சொல்கிறார் வைத்திலிங்கம்!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூரில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் அதன் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தன் ஆதரவாளர்களுடன் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வைத்திலிங்கம் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும்.

வைத்திலிங்கம்

அ.தி.மு.க-வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான். என்னைவிட அதிமுக வரலாறு பற்றி பேசுவதற்கு இங்கு யாருக்கும் தகுதி இல்லை. சிலர் அவர்களின் கருத்துக்களை கூறலாம். அ.தி.மு.க பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஒன்று இணையும் என முன்பு கூறினேன்.

இப்போது வரும் பிப்ரவரிக்குள் கண்டிப்பாக அ.தி.மு.க ஒன்றிணையும். 2026ல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. நான் அதிமுக கரைவேட்டி தான் கட்டுகிறேன் தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்” என்றார்.