Ukrain – Russia: புதினை சந்தித்த இந்திய ஆலோசகர்; “மோடிக்காக…” – ரஷ்ய அதிபர் புதின் கூறியதென்ன?!

இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் முடிவுக்கு வராத உக்ரைன் – ரஷ்யா போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட அதன் சில நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், பொருளாதார ரீதியில் உதவிவரும் நிலையிலும் தொடர்ந்து போர் செய்துவந்தது ரஷ்யா. ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா, `பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வை எட்ட முடியும்” என்பதை உறுதியாக வலியுறுத்தி வந்தது.

புதின் – அஜித் தோவல்

இந்த நிலையில்தான் பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் பயணம் மேற்கொண்டார். இரண்டு நாடுகளின் அதிபர்களிடமும் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பேசியதாக தகவல் வெளியானது. மேலும், பிரதமர் மோடியின் இரண்டு நாட்டுப் பயணம் சர்வ தேச அரசியலிலும் கவனம் ஈர்த்தது. அதன்பிறகுதான், ரஷ்யப் அதிபர் விளாடிமிர் புதின், “சீனா, பிரேசில், இந்தியா ஆகிய நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்” எனக் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ரஷ்யா அதிபர் புதினின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் புதினை நேற்று சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இந்த சந்திப்பின்போது, உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமர் மோடியின் சில ஆலோசனைகளை அஜீத் தோவல் கொண்டுசென்றதாக கூறப்படுகிறது.

புதின் – அஜித் தோவல்

மேலும், அடுத்தமாதம் (அக்டோபர் 22) ரஷ்யாவின் காஸர் பகுதியில் நடைபெறவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டமான பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்துக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ‘பிரதமர் மோடி ரஷ்யப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான முடிவுகளையும், எதிர்காலத்துக்கான வாய்ப்புகளை சுட்டிக்காட்டவும் இந்த சந்திப்பு உதவியது’ என ரஷ்யா தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் ரஷ்யா அதிபர் புதின், பிரிக்ஸ் மாநாட்டில் பிதமார் மோடி கலந்துகொள்வதை குறிப்பிட்டு, “எங்கள் நல்ல நண்பர் மோடிக்காக நாங்கள் காத்திருக்கிறோம், அவருக்கு எங்கள் அன்பான வணக்கங்கள்” எனத் தெரிவித்ததாகவும் ரஷ்யா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அஜித் தோவல் ரஷ்ய அதிபரை சந்திப்பதற்கு முன்பு, புதன்கிழமை ரஷ்யா பிரதமர் செர்ஜி ஷோய்குவை சந்தித்தார். அப்போது இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் பற்றியும், முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.