இந்தியாவில் ஐ.டி துறையில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாக புனே இருக்கிறது. புனே ஹிஞ்ஜாவாடி பகுதியில் இருக்கும் ராஜீவ் காந்தி இன்போடெக் பார்க்கில் ஏராளமான ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகிறது. புனேயையொட்டி இருக்கும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் ஐ.டி நிறுவனங்களும் அது சார்ந்த நிறுவனங்களும் நூற்றுக்கணக்கில் செயல்படுகிறது. ஏற்கனவே புனேயில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டேட்டா சென்டரை நடத்தி வருகிறது. இதற்காக கடந்த 2022-ம் ஆண்டு பினோலெக்ஸ் நிறுவனத்திடமிருந்து 25 ஏக்கர் நிலத்தை ரூ.328 கோடிக்கு வாங்கி இருந்தது. அங்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் டேட்டா சென்டர் கட்டி வருகிறது.
தற்போது புனே மேற்கு புறநகர் பகுதியில் இருக்கும் ஹிஞ்ஜாவாடியில் மேலும் 16.4 ஏக்கர் நிலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. அதனை இந்தோ குளோபல் இன்போடெக் நிறுவனத்திடமிருந்து ரூ.520 கோடிக்கு வாங்கி இருக்கிறது. கடந்த மாதம் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்திரை கட்டமாக ரூ.31.18 கோடி செலுத்தப்பட்டுள்ளது. புனேயில் மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நிலத்திற்காக 848 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
ஏற்கெனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐதராபாத்தில் ரூ.267 கோடியில் 48 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறது. அங்கும் மைக்ரோசாப்ட் டேட்டா சென்டர் செயல்பட்டு வருகிறது. அமேசான் மற்றும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் டேட்டா சென்டரை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியாக நிலத்தை வாங்கி குவித்து வருகிறது. தற்போது பெங்களூரு, ஐதராபாத், சென்னை, மும்பை, புனே மற்றும் நொய்டாவில் செயல்படும் டேட்டா சென்டர்களில் 23 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அளித்திருந்த பேட்டியில், “ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் இந்திய டெவலப்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
அதோடு இந்தியாவில் ஏ.ஐ. மற்றும் டிஜிட்டல் துறையில் 2 மில்லியன் பேரை வல்லுனர்களாக தயார் படுத்தும் திட்டத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.