தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்றக் கட்சியைத் தொடங்கியதிலிருந்து, கொடி அறிமுகம், மாநாடு என அவரின் தொடர் அரசியல் நகர்வுகள் கவனம் பெற்றுவருகிறது. இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்த கட்சியாக அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான், த.வெ.க காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட, காவல்துறை தரப்பிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்ட, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை மாநாடு நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
இந்த நிலையில், தாம்பரம் மாநகரம் கிழக்கு பகுதி தி.மு.க சார்பில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாடம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, “இன்று நடிகர்களெல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமையெல்லாம் என்னவானது என நாம் பார்த்துவிட்டோம். உதாரணத்துக்கு விஜயகாந்த். அவர் கட்சி ஆரம்பித்து என்னவானார் என்பதை தமிழ்நாடு அறியும். அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர் விஜய் நடித்த படமே 2 நாள்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. எனவே, அவர் ஆரம்பித்த அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் தமிழக வெற்றிக் கழகம் ஓடாது. யார் அரசியலுக்கு வந்தாலும் தி.மு.க-வினர் பயப்பட கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி தி.மு.க தான்.
வட்ட செயலாளர்கள் தினமும் 2 மணி நேரம் கட்சி பணியாற்ற வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள். அடுத்த முறையும் தி.மு.க தான் ஆட்சி அமைக்கும். அதற்கு இப்போதிலிருந்தே நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்” எனப் பேசினார்.
இந்த கூட்டத்தில், சனிக்கிழமை காலை 7 மணிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சென்னை மீனம்பாக்கம் வருகையை முன்னிட்டு வரவேற்பு வழங்குதல், தி.மு.க பவள விழாவையொட்டி வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி கட்சியினர் அனைவரின் வீடுகளில் கழக கொடியேற்றுதல், 17-ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பது, இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்ப்பது போன்றவை குறித்தும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY