டெல்லியில் சீக்கியர்கள் குழு ஒன்று சோனியா காந்தி வீட்டை நோக்கி நடைபயணமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபடுகின்றார். அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்களுக்கு எதிராக போராடும் இவர்கள், பாஜக ஆட்சியில் சீக்கியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் ராகுல் காந்தி தனது கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பாஜக பின்புலம் கொண்டவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. மூன்று நாள்கள் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி என்னப் பேசினார் எனப் பார்க்கலாம்.
இது அரசியல் சண்டை இல்லை!
வாஷிங்டன் டிசி-யில் நடந்த நிகழ்வில் ஒரு சீக்கியரிடம் ராகுல் காந்தி இவ்வாறு உரையாற்றினார், “இந்த சண்டை இந்தியாவில் ஒரு சீக்கியராக நீங்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவீர்களா என்பதைப் பற்றியது, ஒரு சீக்கியராகக் கடா அணிய அனுமதிக்கப்படுவீர்களா என்பதைப் பற்றியது, குருத்துவாரா செல்ல அனுமதிக்கப்படுவீர்களா என்பதைப் பற்றியது இந்த சண்டை. நீங்கள் மட்டுமல்ல, எல்லா மதத்தவருக்குமானது”.
ஏற்கெனவே ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வருகிறார் என பாஜக விமர்சிக்கும் நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பதால் பிரச்னை தீவிரப்படுத்தப்படுகிறது.
மத்திய அமைச்சர் கருத்து
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், ராகுல் காந்தி வஞ்சகம் நிறைந்தவர் என்றும் ஆபத்தான நோக்கில் பேசுகிறார் என்றும் கூறியிருக்கிறார். “நம் வரலாற்றில் ஒரு சமூகமாகச் சீக்கியர்கள் பதற்றமடைந்தது, பாதுகாப்பின்மையை உணர்ந்தது ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சி செய்தபோது தான்” என இந்திரா காந்தியைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்.
“ராகுல் காந்தியின் கருத்துகள் காங்கிரஸின் மதச்சார்பின்மை கொள்கைக்கு, மத சுதந்திரத்துக்கு ஆதரவாக இருந்தாலும் ‘Anti-Indian’ நோக்கில் பரப்பப்பட்டு வருகிறது” என்று காங்கிரஸ் தரப்பில் கூறுகின்றனர்.