தஞ்சை: பெண் தொழிலதிபரைத் தாக்கிக் கொள்ளை; ஆற்றுக்குள் வீசப்பட்ட டூவீலர் – 6 பேர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூரில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்தது. தஞ்சாவூர் நகர்ப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்ததால், பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறினர். தஞ்சாவூர், அருளானந்த நகரைச் சேர்ந்தவர் சேதுக்கரசி (70), தொழிலதிபர். கடந்த ஆக்ஸ்ட் 16-ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

ஆற்றுக்குள் கிடந்த டூவீலரை மீட்கும் போலீஸார்

மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சேதுக்கரசி சத்தம் கேட்டு கீழே வந்துள்ளார். அப்போது அவர் முகத்தை துணியால் மூடி தாக்கியுள்ளனர். இதில் சேதுக்கரசி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து, ஒன்பது பவுன் நகை, வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தெற்கு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தஞ்சாவூர் டி.எஸ்.பி சோமசுந்தரம், தனிப்படை எஸ்.ஐ தென்னரசு உள்ளிட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக சம்பவம் நடந்த வீடுகள் உள்ளிட்ட தஞ்சாவூரில் நகரப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் அருந்தவபுரத்தைச் சேர்ந்த ராஜா, சூரக்கோட்டையைச் சேர்ந்த எல்.பாலமுருகன், பி.பாலமுருகன், கபினேஷ், திருவாரூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்த முத்து ஆனந்த், புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய ஆறு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தனர். இதையடுத்து சேதுக்கரசி வீட்டில் இந்த கும்பல்தான் கொள்ளையடித்தது என்பதை கண்டுபிடித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்ததையும் ஒத்துக்கொண்டனர்.

போலீஸார் கைது செய்த கொள்ளை கும்பல்

அவர்களிடமிருந்து, சுமார் 20 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர். சேதுக்கரசியை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்ததையடுத்து, இறந்துவிட்டதாக கொள்ளை கும்பல் நினைத்து விட்டனர். இதனால் அப்போது கொள்ளையடிக்க பயன்படுத்திய டூவீலரை வைத்து போலீஸார் பிடித்து விடுவார்கள் என்பதால், போலீஸில் சிக்காமல் இருக்க அந்த டூவீலரை புது ஆற்றுக்குள் இறக்கி விட்டு தப்பித்ததாகவும் கொள்ளையர்கள் தெரிவித்தனர். ஆற்றுக்குள் கிடந்த அந்த டூவீலரை போலீஸார் மீட்டனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.