அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரைக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், திடீரென மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தையும், அரசு இராசாசி மருத்துவமனையையும் ஆய்வுசெய்திருக்கிறார். இந்த இரண்டு விசிட் குறித்தும் மதுரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கே சொல்லப்படவில்லையாம். என்னவென்று விசாரித்தால், ‘அனைத்துக்கும் தலைமையின் அறிவுறுத்தல்தான் காரணம்’ என்கிறார்கள் குறிஞ்சி இல்ல வட்டாரத்தில்.
“அரசு நிர்வாகத்திலும், கட்சி அமைப்பிலும் உதயநிதிக்கு முக்கியப் பொறுப்புகளைக் கொடுக்கும் முடிவில் இருக்கிறது தலைமை. திடீரென பொறுப்பு கொடுத்தால் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்பதால், தமிழ்நாடு முழுக்க அவரை ஆக்டிவ்வாக வலம்வரச் செய்துவிட்டு, பொறுப்பு கொடுக்கலாம் என்று நினைக்கிறது தலைமை. எனவே, இனி எங்கெல்லாம் உதயநிதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்கிறாரோ, அங்கெல்லாம் சர்ப்ரைஸாகச் சில அதிரடி ஆய்வுகளையும் மேற்கொள்வார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
சமீபத்தில் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் விவாதம் நடந்ததாகச் சொல்கிறார்கள் கமலாலயத் தரப்பில். அப்போது, “தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டுமென்றால், வலுவான கூட்டணி தேவை. ஆனால், இப்போதைய மாநிலத் தலைவர் அதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் வீணடித்ததுடன், சிதைத்தும்விட்டார்.
அவற்றையெல்லாம் சரிசெய்து வலுவான கூட்டணியை உருவாக்கித்தரவேண்டிய பொறுப்பு டெல்லியின் கையில்தான் இருக்கிறது” என ஜி.கே.வாசன் சொல்லியிருக்கிறாராம். “இது ஜி.கே.வாசனின் குரல் அல்ல. அண்ணாமலைக்கு எதிராக இருக்கும் கமலாலய சீனியர்கள், இலைக் கட்சி சீனியர்கள் ஆகியோரின் குரல்தான். அவர்கள் சார்பிலேயே டெல்லிக்குத் தூது போயிருக்கிறார் வாசன்” என்கிறார்கள் உள்விவகாரம் தெரிந்தவர்கள்.
அரசுப்பள்ளியில் நடந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்திய மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு, இப்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். முதலில், அவர் சென்னைக்கு வரும் திட்டத்திலேயே இல்லை. ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டு, சில நாள்கள் கழித்துத்தான் சென்னைக்கு வருவதற்கு டிக்கெட் எடுத்திருந்தாராம். ஆனால், லண்டனிலிருந்து அவரைத் தொடர்புகொண்ட அரசியல் புள்ளி ஒருவர், ‘நீங்க தமிழ்நாட்டுக்குப் போங்கண்ணா. உங்களுக்கு நான் முழு சப்போர்ட் குடுக்குறேன்.
உங்க மேல யாரு… எப்படிக் கை வெக்கிறாங்கனு பார்த்துடலாம்…’ என உசுப்பேற்றியிருக்கிறார். அந்த அரசியல் புள்ளி சொன்னதை நம்பி, அசட்டு தைரியத்தில் சென்னைக்கு வந்த மகாவிஷ்ணுவை அலேக்காகத் தூக்கியிருக்கிறது சைதாப்பேட்டை போலீஸ். அரசியல் புள்ளி சொன்னபடி எந்த சப்போர்ட்டும் கிடைக்காததால், மனம் தளர்ந்துபோய்விட்டாராம் மகாவிஷ்ணு. ‘எத்தனுக்கு எத்தன் உலகினில் உண்டு’ என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் அந்த மலர்க் கட்சி வட்டாரத்தில்.
கோட்டையின் உச்ச தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும், தன்னைச் சுற்றிலும் தனக்குத் தோதான அதிகாரிகளை நியமித்துக்கொள்வது வழக்கம். ஆனால், முதன்மையானவர் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால், தற்போதைய கோட்டை உச்ச அதிகாரியால், அப்படியான மாற்றம் எதையும் முழுமையாகச் செய்து முடிக்க முடியவில்லை.
ஆனாலும் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி தனக்குத் தோதான அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்து வருகிறாராம். முதன்மையானவர் நாடு திரும்பியதும், பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுவதால், அந்த உச்ச அதிகாரியைச் சுற்றி காக்காபோல வட்டமடிக்கிறதாம் அதிகாரிகள் கூட்டம்.
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி திடீரென டெல்லிக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அன்றிரவே சென்னைக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே, ஆளுநர் டெல்லிக்குப் பறப்பதும், இரண்டு மூன்று நாள்கள் தங்கியிருந்துவிட்டு சென்னைக்குத் திரும்புவதும் வாடிக்கையாகியிருக்கிறது. அந்த வகையில், அவருடைய சமீபத்திய பயணம் ஒரு திருமண நிகழ்சிக்கானது என்கிறது ராஜ் பவன் வட்டாரம். ஆனால், ‘திருமண நிகழ்ச்சிக்காக மட்டும் டெல்லிக்குச் சென்று திரும்புபவர் அல்ல ஆளுநர் ரவி.
மத்திய உள்துறையைச் சேர்ந்த சீனியர் உயரதிகாரி ஒருவருடன், தமிழக அரசியல் சூழல் குறித்தும், போதைப்பொருள் நடமாட்டம் குறித்தும் விரிவான ஆலோசனையும் நடத்தியிருக்கிறார் அவர். அந்த ஆலோசனையில், தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகரான ரவிச்சந்திரனும் கலந்துகொண்டிருக்கிறார். அதற்காகத்தான் திடீரென டெல்லிக்குப் பயணமானார் ஆளுநர்’ என்கிறார்கள் ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY