பெண்களை இன்றும் அடிமைப்படுத்தும் மனநிலையிலேயே பாஜக-வும், அதன் சித்தாந்த வழிகாட்டி ஆர்.எஸ்.எஸ்ஸும் இருப்பதாக அடிக்கடி எதிர்க்கட்சிகள் கூறிவருவதுண்டு. சமீபத்தில், அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம், இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது பற்றி கேள்வியெழுப்பட்டது.
அதற்குப் பதிலளிக்கையில் ஆர்.எஸ்.எஸ்ஸையும், பா.ஜ.க-வையும் சேர்த்து விமர்சனம் செய்த ராகுல் காந்தி, “இந்தியாவில் பெண்களின் மீது பெரும்பாலான ஆண்களின் அணுகுமுறை மிக மோசமாக இருக்கிறது. ஆண்களைப்போலவே பெண்களையும் அணுக வேண்டும் என்ற நிலைக்கு இந்த மனநிலை மாற வேண்டிய அவசியம் இருக்கிறது. மறுபக்கம், பெண்கள் இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும், வீட்டிலேயே இருக்க வேண்டும், சமைக்க வேண்டும், அதிகம் பேசக் கூடாது என ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க-வும் விரும்புகின்றன. அதேசமயம், பெண்கள் எதை விரும்புகிறார்களோ அதை அவர்கள் செய்ய வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க, வெளிநாடுகளில் இந்தியாவை இழிவுபடுத்துவதே அவரின் எண்ணம் என விமர்சித்தது. இந்த நிலையில், ராகுலின் பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் தலைவர் எதிர்வினையாற்றியிருக்கிறார். நாக்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “ஆண்களால் செய்யக்கூடிய வேலைகளைப் பெண்களால் செய்ய முடியாது. அதேபோல, பெண்களால் செய்யக்கூடிய வேலைகளை ஆண்களால் செய்ய முடியாது.
இருப்பினும், பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால் அனைவரின் வளர்ச்சிக்கும் அவர்களால் உதவ முடியும். அனைவரின் நலனுக்காகவும் பெண் உழைக்கிறார். விவசாயம்தான் நம் மதம் என முற்காலத்தில் மக்கள் கூறிவந்தனர். மதம் என்பது சமையலறை அல்ல, சமூகத்தின் வேலை. சமூகத்தின் வேலையைச் செய்வதால் மதம் வளர்கிறதே தவிர… போதிப்பதால் அல்ல” என்று கூறினார்.