கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த மாதம் ஆகஸ்ட் 9-ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்தது. இவ்வழக்கை ஆரம்பத்தில் கொல்கத்தா காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது சி.பி.ஐ இவ்வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் குற்றவாளிகள் சஞ்ஜய் ராய், சந்தீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து உண்மையான குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும் நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொல்கத்தாவில் மருத்துவர்கள் ஒன்று திரண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“சி.பி.ஐ இவ்வழக்கை விசாரித்து வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும். எனவே போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு மருத்துவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும்.” என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், “போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புங்கள்” என்று மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக முதல்வர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்தில் அனுமதியும் கேட்டுள்ளனர்.
மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று அரசு உறுதியளிக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.