“கொள்கையை விட்டுக்கொடுத்து, ஒன்றிய அரசிடம் நிதியைப் பெறத் தேவையில்லை” -அமைச்சர் அன்பில் மகேஷ்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒன்றிய கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசின் கல்வித்துறைக்கு ஒதுக்கக்கூடிய நிதியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இரு மொழி கல்விக் கொள்கையை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

கொடைக்கானல்

பல்வேறு விதமான துறைகளைச் சார்ந்த மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. சிறந்த ஒருங்கிணைந்த கல்வியை தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்த கல்வியை ஏற்கனவே தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. பல்வேறு விதமான திட்டங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தரப்படும் என்று ஒன்றிய அரசு கூறி வருகிறது. கொள்கைகளை விட்டுக் கொடுத்து நிதி பெறத் தேவையில்லை.

ஒன்றிய அரசு பல்வேறு விதமான முரண்பட்ட கல்வியை புகுத்த முனைகிறது. ஆறாம் வகுப்பில் இருந்து குலக்கல்வி முறையை கொண்டு வர நினைக்கின்றது. தமிழ்நாடு அரசு கல்வித்துறை மிக மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஒன்றிய அரசின் சித்தாந்தத்தை நுழைக்க முயற்சி செய்கின்றது. 2 ஆயிரத்து150 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து உள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

அன்பில் மகேஸ்

ஒன்றிய அரசு பணம் தராவிட்டாலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நிலைகளில் போராடி வெற்றி பெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நிதி விவகாரத்திலும் வெற்றி பெறுவார், கல்வி நிதியில் யார் அரசியல் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். ஒன்றிய அமைச்சரும் இந்தி அல்லாத மாநிலத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன நிர்பந்தமோ இந்த புதிய மத்திய கல்விக் கொள்கையை புகுத்துகின்றார். நாம் புதிதாக பணம் கேட்கவில்லை, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நடைமுறையில் உள்ள பணத்தை தான் கேட்கின்றோம்.

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் சங்கங்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. அவர்களது 31 அம்ச கோரிக்கைகளில் 12 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களை அழைத்து பேசி அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.