`மதுரை என்றாலே மூர்த்திதான்’ – புகழ்ந்த உதயநிதி; மாஸ் காட்டிய மூர்த்தி; சைலைன்ட் மோடு பிடிஆர்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்பு திருமோகூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி மேடை

அமைச்சர் மூர்த்தி சார்பில் இந்த நிகழ்ச்சிக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கட்சி மாநாடு போல பந்தல், வாழை, கரும்பு கொண்ட அலங்காரத் தோரணம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழா பந்தலில் ஆங்காங்கே எல்இடி திரைகள், திடல் முழுவதும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதோடு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உதயநிதிக்கு மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் திமுகவில் பொறுப்பிற்கு வருவதற்கு முன், இதே பகுதியில் வைத்து தான் மூத்த கட்சியினருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல இந்த நிகழ்ச்சியையும் மாநாட்டை போன்று நடத்தி உள்ளார்.

நினைவுப்பரிசு வழங்கிய மூர்த்தி

`மதுரை என்றாலே மூர்த்தி; மூர்த்தி என்றாலே மாநாடு’ என்ற பெயர் வந்துள்ளது. மதுரை மக்களுக்கு ஏராளமான திட்டங்களுக்கு அமைச்சர் மூர்த்தி முதலமைச்சரிடம் கேட்டு வாங்கி வருகிறார். இதனால் மதுரை நோக்கி ஏராளமான திட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது” என அமைச்சர் மூர்த்தியை வெகுவாக புகழ்ந்து பேசினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர், “தமிழக அளவில் இரண்டாம் கட்டத் தலைவர்களில் தென்மாவட்டத்தை கன்ட்ரோலில் வைக்கும் அளவுக்கான செயல்பாடுகளில் மூர்த்தி ஈடுபட்டு வருகிறார். தென்மாவட்டம் என்றால் மூர்த்தி தான் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதை கட்சி தலைமைக்கு காட்ட வேண்டும். குறிப்பாக துணைமுதல்வராக உள்ள உதயநிதிக்கு காட்டவே அரசு நிகழ்ச்சியைக் கூட கட்சி மாநாடு போல பிரமாண்டமாக ஏற்பாடு செய்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

அதே நேரத்தில் திமுக கட்சி பாரம்பரியத்தில் முக்கியமானவர்களாக பார்க்கப்படும் பழனிவேல் தியாகராஜன் கட்சி தலைமையிடம் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதை மூர்த்தி தனக்கு சாதமாக மூர்த்தி பயன்படுத்தி கொண்டு வருகிறார். அதனால் தான் மேடையில் வைத்து, `மதுரை என்றாலே மூர்த்தி தான்’ என உதயநிதி பேசும் அளவுக்கு வந்துவிட்டது. இதனால் தான் மேடையில் சற்று அப்செட்டாக இருந்தார் பழனிவேல் தியாகராஜன்.” என்கிறார்கள்.