‘பாஜக-வுக்கு வாக்களித்த கோவை மக்கள் வருத்தப்படுகிறார்கள்’ – சொல்கிறார் எஸ்.பி வேலுமணி

கோவை குனியமுத்தூர் பகுதியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “1998-ம் ஆண்டு கூட்டணி அமைத்து பாஜகவுக்கு வாழ்க்கை தந்து, எம்.பி, அமைச்சர் கொடுத்தது ஜெயலலிதா.  பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு அதிமுக தான் அங்கீகாரம் கொடுத்தது.

வேலுமணி

அதிமுக அவ்வளவுதான் என்று எந்த கொம்பன் வேண்டுமானாலும் பேசலாம்.  2009 பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை. கருணாநிதி மகன் அழகிரி, ‘அதிமுக அழிந்துவிட்டது’ என்று கூறினார்.

2010-ம் ஆண்டில் அதிமுக கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடத்திய ஆர்ப்பாட்டம் திருப்பு முனையாக மாறியது. 2011 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியை பிடித்தோம். அதுதான் 2026 சட்டமன்ற தேர்தலிலும் நடக்கப் போகிறது. இந்தக் கட்சியை யாரும் எதுவும் செய்ய முடியாது.

கோவை

சட்டமன்ற என்று வரும்போது மக்கள் அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டது அதிமுக. எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால் இலங்கை பிரச்னைக்கு தீர்வு  கிடைத்திருக்கும். எல்லாமே மாறும். நாம் நம்முடைய வேலைகளை சரியாக செய்தால் போதும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், எப்போதும் வாங்காத ஓட்டை  விட குறைவாக வாங்கியுள்ளோம். ஒண்ணுமே இல்லாத பாஜக அதிக வாக்கு வாங்கியுள்ளது. வாக்களித்த மக்கள் வருத்தப்படுகிறார்கள். திமுக கடந்த 3 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், பாஜக இங்கு பெரிதாக இல்லை.

அண்ணாமலை

ஏன் அவர்களுக்கு வாக்களித்தோம் என்று புரியவில்லை என்று மக்கள் இப்போது சொல்கிறார்கள். அண்ணாமலை  தொலைக்காட்சியிலும், சமூகவலைதளங்களிலும் தான் அரசியல்  செய்கிறார். 500 நாள்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY