சென்னை, அரசுப் பள்ளியில் `தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு’ என்கிற பெயரில் `பாவம்’, `புண்ணியம்’ குறித்து பிற்போக்குத்தனமாகப் பேசி, சர்ச்சைக் கிளப்பிய `பரம்பொருள்’ அறக்கட்டளையின் நிறுவனர் மஹா விஷ்ணு என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், “போன ஜென்மத்தில் `பாவம்’ பண்ணியிருந்தால் அவர்களுக்கு மகன்கள் மட்டுமே பிறப்பார்கள். புண்ணியம் பண்ணியிருந்தால்தான் பெண் குழந்தைகள் பிறப்பார்கள்’’ என்று அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசிய காணொளியும் படுவைரலாகி, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்தக் காணொளியின் பின்னணிக் குறித்து விசாரித்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச சைக்கிள்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி இப்படி பேசியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் உட்பட பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.
மாணவ – மாணவிகள் மத்தியில், அமைச்சர் காந்தி பேசிய முழுக் காணொளியையும் கேட்டபோது, “ “நம்முடைய அரசுப் பொறுப்பேற்ற பிறகு எல்லாம் தலைக்கீழாக மாறிப்போச்சு. தனியார் பள்ளிகளைவிடவும் அரசுப்பள்ளிகள்தான் நல்லா இருக்கிறது. எந்தெந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. `என்னத் தேவை?’ என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்படுகிறது. 5 ஸ்டார் ஹோட்டல்கள் மாதிரி பில்டிங் கட்டுகின்றனர். அரசுப் பள்ளிகள் முன்மாதிரி ஆகிவிட்டன.
அதனால, மாணவ – மாணவிகள் அரசுக் கொடுக்கிற மகத்தான திட்டங்களைப் பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. அரசு மூலமாக நிறைய உதவிகள் கிடைக்கிறது. ஒண்ணே ஒண்ணுதான். பெற்றோர்களை மட்டும் மறக்காதீங்க. அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களைப் படிக்க வைக்கிறாங்க தெரியுமா? அதுமட்டுமல்ல. நான், அடிக்கடி இன்னொன்னையும் சொல்லுவேன். போன ஜென்மத்தில் `பாவம்’ பண்ணியிருந்தால் அவர்களுக்கு மகன்கள் மட்டுமே பிறப்பார்கள். புண்ணியம் பண்ணியிருந்தால்தான் பெண் குழந்தைகள் பிறப்பார்கள். பெண்ணுக்குத்தான் தாய், தந்தையைப் பற்றித் தெரியும். என் பொண்ணு, என்னைப் பார்ப்பவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் கொடுக்கிறார். எனக்கே தெரியாது. நான் தும்பினால்கூட மருந்து வந்துவிடுகிறது. வீட்டில் இருக்கிற பசங்க கூட என்னென்னு கேட்க மாட்டாங்க. நான் பொதுவாக சொல்றேன். இதுதான் இயல்பு. நம்ம பெண்கள் காட்டுகிற பாசம் மாதிரியே நாமலும் பாசம் காட்டினால், குடும்பம் மட்டும் இல்லீங்க இந்த நாடே நல்லாயிருக்கும்’’ என்று பேச்சை நிறைவு செய்திருக்கிறார் அமைச்சர் காந்தி.
அமைச்சர் காந்தி கடந்த மாதம் பேசிய இந்த காணொளியை தற்போது பகிர்ந்து வரும் எதிர் தரப்பினர், அரசு பள்ளியில் பாவம் புண்ணியம் குறித்து பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு பள்ளியில் பாவம் புண்ணியம் குறித்து பேசி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.