Reliance + Disney : இந்திய பொழுதுபோக்குத் துறையில் ஏற்படப்போகும் `அதிரடி’ தாக்கம் என்ன? | ஒரு பார்வை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் + டிஸ்னி இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது இந்திய திரைத்துறையில் நிகழ்த்தக்கூடிய தாக்கம் குறித்து பார்ப்போம்.

இந்திய பொழுதுபோக்குத் துறையையே புரட்டிப் போடத்தக்க இந்த இணைப்பின் மொத்த மதிப்பு சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனமும், உலக அளவில் பொழுதுபோக்குத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் டிஸ்னியும் ஒரே குடையின் கீழ் வரும்போது இந்திய பார்வையாளர்களின் பொழுதுபோக்குக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவு.

ரிலையன்ஸுக்கும் டிஸ்னிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. கூடவே, பல்வேறு யூகங்களும் தொடங்கிவிட்டன. இந்த டிஸ்னி – ரிலையன்ஸ் இணைப்பால் இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களாக திகழும் நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ மட்டுமன்றி டிவியில் ஆதிக்கம் செலுத்தும் ஜீ, சோனி ஆகிய நிறுவனங்கள் ஆட்டம் காணலாம் என பல செய்திகள் வெளியாகின.

இந்த யூகங்களை உண்மையாக்கும் வகையில் கடந்த பிப்ரவரியில் டிஸ்னி – ரிலையன்ஸ் இடையிலான முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களின் கீழ் இயங்கும் டிஜிட்டல் செயல்பாடுகள், வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியாவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் போடப்பட்டது. ஒருவழியாக இந்த $8.5 பில்லியன் ஒப்பந்தத்துக்கு இந்திய போட்டி ஆணையம் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.

இதன் மூலம், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரிலையன்ஸ் நிறுவனத்திடன் 16.35% பங்குகளும், வியாகாம் 18 நிறுவனத்தின் கீழ் 46.82% பங்குகளும் இருக்கும். டிஸ்னியிடம் 36.84% பங்குகள் இருக்கும். இந்த மெகா இணைப்பு, ஸ்டார் இந்தியா உள்ளிட்ட டிஸ்னியின் ஊடக செயல்பாடுகள் மற்றும் வியாகாம் 18 உள்ளிட்ட ரிலையன்ஸின் ஊடக செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும்.

மாற்றங்கள் என்னென்ன?

இந்திய பொழுதுபோக்குத் துறையையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த மாபெரும் இணைப்பு 120+ டிவி சேனல்களின் 75+ கோடி பார்வையாளர்களை கொண்ட 40 சதவீத தொலைகாட்சி மார்கெட்டை தக்கவைக்க சாத்தியமுள்ளது.

அதாவது, டிஸ்னியின் ஸ்டார் இந்தியாவின் கீழ் நாடு முழுவதும் 8 மொழிகளில் சுமார் 70 தொலைக்காட்சி சேனல்கள் இயங்கி வருகின்றன. இன்னொருபுறம், ரிலையன்ஸின் வியாகாம் 18-ன் கீழ் 8 மொழிகளில் 38 சேனல்கள் இயங்கி வருகின்றன. இந்த இரு நிறுவனங்களின் கீழ் ஜியோ சினிமாஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் உள்ளன. அதேபோல இரு நிறுவனங்களும் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

Reliance + Disney

இவை எல்லாவற்றுக்கும் மேல் இந்தியாவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை தனித்தனியே தக்கவைத்ததன் மூலம் சமீப காலங்களில் இந்த இரு நிறுவனங்களின் செல்வாக்கு மென்மேலும் உயர்ந்துள்ளது.

கிரிக்கெட் வெறி நாடி நரம்புகளில் எல்லாம் ஊறிப்போன இந்தியா போன்ற நாட்டில், இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு என்பது டிவி, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் 75-80 சதவீத விளையாட்டு ஒளிபரப்பு உரிமையை எளிதாக கட்டுப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும், இந்த இணைப்பால் போட்டி நிறுவனங்கள் ஒற்றை இலக்க சந்தைக்கே போராட வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை ஒலிகளும் எழாமல் இல்லை.

இதனால்தான் இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும்போதே “தன்னார்வ மாற்றங்களுக்கு உட்பட்டது” என்று தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அந்த தன்னார்வ மாற்றங்கள் என்ன என்பதை இந்த இரண்டு நிறுவனங்களும் இன்னும் பொதுவில் பகிரவில்லை.

Reliance + Disney

ஆனாலும், கிரிக்கெட் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்யும்போது விளம்பர கட்டணங்களை உயர்த்த மாட்டோம் என்று இந்த இரு நிறுவனங்களும் இப்போதைக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பே குறிப்பிட்டப்படி இந்த இணைப்பு இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கும் கடுமையான ‘டஃப்’ கொடுக்கக் கூடும்.

குறிப்பாக, இந்த நிறுவனங்கள் எடுக்கும் கட்டண முடிவுகள் என்பது மற்ற நிறுவனங்களையும் அதை நோக்கித் தள்ளும் நிலை ஏற்படும். இதற்கான உதாரணத்தை ரிலையன்ஸ் ஜியோ-வில் இருந்தே கொடுக்க முடியும்.

2016-ஆம் ஆண்டு ஜியோ முதன்முதலில் அறிமுகமானபோது கொடுக்கப்பட்ட அதிரடி சலுகைகளால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு தாவினர். அதன் விளைவு, இப்போது ஜியோ எடுக்கும் கட்டணம் தொடர்பான முடிவுகளைத்தான் மற்ற நிறுவனங்களும் பின்பற்றுகின்றன. அல்லது அதை நோக்கி தள்ளப்படுகின்றன.

Reliance + Disney

கடந்த ஜூலை மாதம் டெலிகாம் சேவைகளின் கட்டணத்தை 12-25% ஜியோ அதிகரித்த பிறகே மற்ற நிறுவனங்களும் உயர்த்தியது நினைவிருக்கலாம். இதே நிலைதான் டிஜிட்டல் துறையிலும் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எப்படி இருந்தாலும் தொடர்ந்து நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்லும் இந்திய டிஜிட்டல் சந்தையில் இந்த இணைப்பின் மூலம் டிஸ்னி – ரிலையன்ஸ் நிறுவனங்கள் கணிசமான அளவு பலனடையப் போகின்றன என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை.

ஆனால், இந்தப் போக்கு மூலம் பொழுதுபோக்குத் தளங்கள் நாடும் மக்களுக்கு மலிவாக அமையுமா அல்லது கட்டணங்கள் மூலம் விரல்களுக்கு ‘சூடு’ வைக்கப்படுமா என்பது இப்போதைக்கு 8.5 பில்லியன் டாலர் கேள்வி!