மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக நேற்று (செப்டம்பர் 8) அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரானதும் ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் வெளிநாடு பயணம் இது. பயணத்தின் முதல் நாளே, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார். அந்த உரையாடல் இதோ…
எதிர்க்கட்சி தலைவரின் அன்றாட பணி என்ன?
எதிர்க்கட்சியின் ‘இதயமே’ மக்களின் குரலை எடுத்துச் சொல்வதில்தான் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராகத் தனிநபர், குழு, தொழில்துறை, விவசாயம் ஆகியவற்றின் நலனுக்குக் குரல் எழுப்ப வேண்டும். எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதைத் தெளிவாகக் கேட்டு, கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலுக்குப் புதிதாக வரும்போது, ஒரு பிரச்னை வந்தால் அது அவ்வளவு தெளிவாகத் தெரியாது. அந்தப் பிரச்னைக்குள் ஆழமாகச் செல்லும்போது, அது சம்மந்தப்பட்ட அனைத்தும் தெரியவரும்.
அடுத்து நாடாளுமன்ற நேரங்களில், அங்கே சொல்ல வேண்டும். அது ஒரு போர்க்களம்… வார்த்தைகளின் போர்க்களம்… ஐடியாக்களின் போர்க்களம். மேலும் தினமும் கட்சி ஆட்கள் தொடங்கி விவசாயிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் சந்திக்க வருவார்கள். அத்தனை பேர் பேசுவதையும் கவனமாகக் கேட்டு புரிந்துகொள்ள வேண்டும்.
முதல் முறை நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், இப்போதிற்கும் உங்களுக்கும் ஒரு விஷயத்தை அணுகுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
இப்போது பேசுவதை விட, கவனிப்பது மிக முக்கியம் என்பதை உணர்ந்துள்ளேன். கவனிப்பது என்றால் கேட்பது என்பதில்லை ஒருவர் பேசுவதை அவருடைய இடத்திலிருந்து புரிந்துகொள்வது ஆகும். மேலும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அனைத்து விஷயங்களுக்கும் போராடாமல் எதற்குப் போராட வேண்டும் என்பதைத் தெரிந்து போராட வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளேன்.
எது முன்னுரிமை?
அரசியலாக இருந்தாலும், பிசினஸாக இருந்தாலும் ‘எது செய்யக்கூடாது?’ என்பதைத் தெரிந்துக்கொள்வதே சிறந்த தந்திரம்.
‘பாரத் ஜோடோ’ யாத்திரை பற்றி…
‘மக்களுடனான அனைத்து தொடர்புகளும் எங்களுக்கு அடைக்கப்பட்டது. நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசினோம்; அது ஒளிபரப்பாகவில்லை. மீடியாவுக்கு சென்றபோதும், அது வெளியாகவில்லை. நீதித்துறையில் ஆவணங்களாகச் சமர்ப்பித்தோம், அதுவும் வெளியாகவில்லை. அதனால் எங்களுக்கு எப்படி மக்களை தொடர்புகொள்வது என்றே தெரியவில்லை. அப்போதுதான் மக்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்ற ஐடியா வந்தது.
எனக்கு முதல் 3-4 நாள்களுக்கு முட்டி வலி இருந்தது. 4,000 கி.மீ என்பது எளிதல்ல… ஆனால் அது எளிதாக முடிந்தது. பாரத் ஜோடோ யாத்திரை பணி, அரசியல், மக்கள் குறித்த என் பார்வையையே மாற்றியது. இந்த யாத்திரை இந்தியாவுக்கு மட்டுமல்ல பல நாடுகளுக்கும் ‘அரசியலில் அன்பு’ என்ற கருத்தை வெளிக்கொண்டு வந்தது. அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
பாரத் ஜோடா யாத்திரையில் நடந்த ஆச்சரிய தருணங்கள் பற்றி?
இந்த யாத்திரையில் நான் பேசியதெல்லாம் என்னுடையது அல்ல. மக்கள் என்னிடம் எதைச் சொன்னார்களோ அதைத்தான் பிரதிபலித்தேன். மக்களின் எண்ணங்கள், நாட்டின் எண்ணம் ஆகியவைதான் நான் பேசினேன். அது எதுவும் என்னுடையது அல்ல. ஆரம்பத்தில் சில நாள்கள் நான்தான் பேசுகிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு இது போகப் போகத் தான் புரிந்தது.
புத்தர், ராமர், சிவன், மகாத்மா காந்தி போன்றவர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் ‘தாங்கள் யார்’ என்பதை மறந்து, மக்களுக்காகப் பணியாற்றினார்கள். இதுதான் இந்திய அரசியல், இவர்கள்தான் இந்தியா தலைவர்கள். இப்படி தான் இந்தியத் தலைவர்கள், அமெரிக்கத் தலைவர்களிடம் இருந்து மாறுபடுகிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் பங்கு என்ன?
இங்கிருக்கும் இந்திய இளைஞர்கள்தான் இந்தியாவிற்கும், உலகின் பிற நாடுகளுக்குமான பாலம். அமெரிக்காவில் ‘சமத்துவம்’ என்பது எங்கும் இருக்கிறது. நான் இங்கு (பல்கலைக்கழகம்) வருவதற்கு முன்பு, ஒரு டிரக் டிரைவரிடம் பேசினேன். அவரிடம், ‘உங்களுக்கு இங்கு என்ன பிடித்திருக்கிறது?’ என்று கேட்டபோது, ‘சமத்துவம்’ என்று கூறினார். இது இந்தியாவில் ஒரு டிரக் டிரைவருக்கு சாத்தியப்படாது. அதனால் நீங்கள் (இந்திய இளைஞர்கள்) சமத்துவத்தை இந்தியாவிற்கு எடுத்து வாருங்கள். மேலும் நீங்கள் இருக்கும் நாட்டின் கலாச்சாரம், உங்கள் கலாச்சாரம் ஆகியவற்றை நன்கு தெரிந்துகொண்டு, அதில் நீங்கள் என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாக யோசியுங்கள்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து?
உலகில் எல்லா நாடுகளிலும் வேலைவாய்ப்பு பிரச்னை கிடையாது. மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவில்தான் இந்த பிரச்னை உள்ளது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்னை இல்லவே இல்லை.
30, 40, 50களில் அமெரிக்காவிலிருந்து உற்பத்திகள், அதன்பிறகு கொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டது. அதனால்தான் இப்போது சீனாவில் வேலைவாய்ப்பு பிரச்னை இல்லை. எங்கு உற்பத்தி இருக்கிறதோ, அங்குதான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் நுகர்வுகள்தான் அதிகம் உள்ளது. அதனால்தான் வேலைவாய்ப்பு பிரச்னை இருந்து வருகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இந்தியாவில் உற்பத்தியைக் கொண்டுவர வேண்டும்.
ஏஐ தொழிற்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்று நினைக்கிறீர்களா?
ஒவ்வொரு தொழில்நுட்பம் உருவாகும்போதும் வரும் பேச்சு தான் இது. எந்த தொழில்நுட்பமும் வேலைவாய்ப்புகளைப் பறிக்காது. அது வேறுவிதமான வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்கும். அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ, அப்படி அதன் விளைவு நமக்கு கிடைக்கும்.
இந்தியாவில் கல்வியை நவீனமாக்க உங்கள் பிளான் என்ன?
பலரும் இந்தியாவில் திறன் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை, இந்தியாவில் திறனை மதிப்பதில்தான் பிரச்னை உள்ளது. இந்தியாவில் திறன் மற்றும் கல்வி இரண்டும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகிறது. இது இரண்டும் கல்வியை நவீனமாக்க இணைக்கப்பட வேண்டும்.
உற்பத்தி தொழில்துறையில் என்ன முன்னேற்றம் வேண்டும்?
இது அவசியமில்லை என்ற பெரும்பாலான இந்தியர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் எங்குமே உற்பத்தி நடக்கவில்லை என்று கூறமுடியாது. தமிழ்நாடு, கர்நாடகா, பூனா ஆகிய பகுதிகளில் நடந்துகொண்டுதான் உள்ளது. இவை மிகச்சிறந்த உதாரணம்.
இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பொருள் பிரபலம். அதை வைத்தே அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி மேற்கொண்டால் உற்பத்தித்துறை வளரும். ஜி.எஸ்.டி வரியே இந்தியாவில் உற்பத்திக்கு எதிரானது.
இளைஞர்கள் எப்படி பொது சேவையிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் பங்கு பெற வேண்டும்?
எங்களுடன் வந்து பணிபுரியுங்கள். இது எப்போதும் எளிதாக இருக்காது. எங்களுடம் பணிப்புரிய இன்டர்ன்ஷிப் திட்டங்கள் உள்ளது.
‘பாரத் ஜோடா’ யாத்திரையை இன்னும் சிறப்பானதாக மாற்ற, என்ன செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
அப்படி எதுவும் நான் நினைக்கவில்லை. நாம் எதை செய்தாலும், அதை விட வேறொன்று சிறப்பானதாகத் தோன்றும். அதனால், சிறப்பானது என்ற ஒன்றை யாராலும் செய்ய முடியாது. ஆனால் நாம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
இளைஞர்கள் பொதுசேவையில் ஈடுப்பட வேண்டுமா? அரசியலில் ஈடுபட வேண்டுமா?
உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை செய்யுங்கள்.
ஏழ்மை பக்கம் இருக்கும் இந்தியர்களும் வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் திறன்களை அழிப்பது அதிகம் நடந்துவருகிறது. அதை நிறுத்த வேண்டும். மேலும் திறன்களை வளர்க்க வேண்டும். நிதி உதவிகள் அவர்களுக்கு செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பில் பெண்களின் நிலை?
பெண்களை ஆண்கள் நடத்தும்விதம் மாற வேண்டும். அவர்களும் திறன், நிதி போன்றவற்றில் உதவி செய்ய வேண்டும்.