Mahavishnu: `வள்ளுவர் வழில வாழ்றவர இப்படி பண்றீங்களே!’ – மஹாவிஷ்ணு கைதும் ஆதரவாளர்கள் ரியாக்‌ஷனும்!

அரசுப் பள்ளியில் பேசிய சர்ச்சைப் பேச்சால் பேசுபொருளாகியிருக்கும் மஹாவிஷ்ணுவை சென்னை விமானத்திலிருந்து சைதாப்பேட்டை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் வந்த மஹாவிஷ்ணுவை அழைத்துச் செல்ல காவல்துறை தயாராக இருந்த நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் என சிலரும் விமான நிலையத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

Mahavishnu

‘குருஜி விமானத்தில் வந்துகொண்டிருக்கிறார். சென்னை வந்தவுடன் எல்லா சர்ச்சைகளுக்கும் விளக்கமளிப்பார்.’ என்பது போல ஒரு பதிவை மஹாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு காலையிலேயே அலப்பறையைக் கூட்டியிருந்தனர்.

மதியம் 1:10 மணியளவில் மஹாவிஷ்ணு வந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது. கொஞ்சம் அதிகமாகவே போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.விமான நிலையத்திற்குள்ளேயே மஹாவிஷ்ணுவை வளைத்த சைதாப்பேட்டை போலீஸார், அங்கேயே அலுவலகத்தில் வைத்து சிறிது நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

மஹாவிஷ்ணுவின் ஆதரவாளர்கள் என சிலரும், ஊடகத்தினரும் திரண்டிருந்ததால் வழக்கமாக வெளிநாட்டு பயணியர்கள் வெளியேறும் வாயில் கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. இதனால் போலீஸார் வேறு ரூட் பிடித்தனர். சிறிது நேர விசாரணைக்குப் பிறகு மஹாவிஷ்ணுவை முதல்தளம் வழியாக யாருக்கும் தெரியாமல் சைதாப்பேட்டை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

மஹாவிஷ்ணுவை காணமுடியாத விரக்தியில் அங்கிருந்த வெள்ளை உடை தரித்த அவரின் சில ஆதரவாளர்கள் ஊடகத்தினருடன் கடுமையாக பொங்கினர். `I Support Mahavishnu’ என போஸ்டர்களோடு வந்திருந்த அவர்கள் பேசியவை இங்கே.. ‘எங்க குருஜி எங்களுக்கு அன்பை மட்டும்தான் போதிச்சிருக்காரு. ஒரு படி அரிசி இருந்தாகூட அதை எறும்புகளுக்கு தானமாக்குங்கனு சொல்லிருக்காரு. அவரோட கருத்துகளால ஈர்க்கப்பட்டு இன்னைக்கு லட்சம் பேரு அவர் பின்னாடி இருக்குறோம்.

வள்ளலார் வழியில வள்ளுவர் வழியில சித்தர்கள் மரபுல அவரு வாழ்க்கைய பத்தின உண்மைய சொல்றாரு. அவரால தற்கொலை மனநிலைல இருந்த பல பேரு மீண்டு வந்து மறுவாழ்க்கை பெற்றிருக்காங்க. மனுசனுக்கு மிஞ்சுன சக்தி ஒன்னு இங்க காத்துல கரண்ட்டு மாதிரி இருக்கு. அந்த சக்தி அவருக்கு எதிரான விஷயங்களை தடுக்கும்.

சோதனைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி அவரு ஜெயிப்பாரு. அதுக்காகத்தான் அவர்கூட லட்சக்கணக்கான ஆன்மாக்கள் அன்பால இணைஞ்சு நிக்குறோம். அவருகிட்டயே நாங்க கேட்டோம், ‘என்ன குருஜி இப்படி தப்பு தப்பா பரப்புறாங்களேன்னு…’ அதுக்கு அவரு ‘நாம அன்பதான் போதிக்குறோம். யாருக்கும் பயப்பட வேணாம். மடில கனமில்ல வழில பயமில்ல.’ என கூறினார்” என மஹாவிஷ்ணுவின் ஆதரவாளர் ஒருவர் சன்னதம் எடுத்து ஆடி முடித்தார்.

‘உங்களுக்கெல்லாம் அவர் பேசுறது புரியாதுங்க. அவர் என்ன தப்பா பேசிட்டாரு அப்படி?. அவரோட தத்துவங்களுக்கு ஒரு முடிவே கிடையாதுங்க…’ என எதோ இயற்பியல் தத்துவத்துக்கு விளக்கம் சொல்வதை போல கூறினார் ஒருவர்.

`மஹாவிஷ்ணுவை வேறு பக்கமாக சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்’ என காவல்துறை கூறிய பிறகும், அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்ததால், மஹாவிஷ்ணு ஆதரவாளர்களின் கூட்டத்தை காவல்துறையினர் கலைத்துவிட்டனர்.