20,000 போதை மாத்திரைகள், 1,000 கிலோ குட்கா; கோவையை அதிரவைத்த போதை நெட்வொர்க் கைது!

கோவை கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை கண்காணிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கோவை சிட்டியில் போதை மாத்திரை விற்பனை செய்த யாசிக் இலாஹி, மரியா, முஜிப் ரகுமான், கிருஷ்ணன், சிநேகா, ஆசக் ஷெரிப் மற்றும் ரிஸ்வான் ஆகிய 7 பேர் கொண்ட கும்பலை போலீஸ் கைதுசெய்துள்ளது. இவர்களில் 2 பேர் பெண்கள்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அவர்களிடம்  இருந்து 1,000-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 1.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் போதை மாத்திரைகளை, ஹரியானா மாநிலத்திலிருந்து வாங்கி, கோவையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

ஹரியானாவில் உள்ள சச்சின் கார்க் என்பவர் போதை மாத்திரைகளை கூரியரில் அனுப்பியுள்ளார். இதற்காக போலி ஜி.எஸ்.டி பில்கள் தயாரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. கோவை போலீஸார் ஹரியானா சென்று சச்சின் கார்க்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து 19,500 போதை மாத்திரைகள், போலி பில், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

சச்சின் கார்க்

வலி நிவாரணி மாத்திரைகளை போதைப்பொருளாக பயன்படுத்த விற்றுள்ளனர். சராசரியாக ஒரு மாத்திரை ரூ.300-க்கு விற்பனை செய்துள்ளனர். இவர்கள் கோவைக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் போதை மாத்திரை விற்றுள்ளனர்.

அதேபோல சரவணம்பட்டி பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி என்பவர் குட்கா பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. சர்வன் கிரி காரில் பயணிக்கும்போது போலீஸார் கைது செய்தனர்.

சர்வன் கிரி
ராம்குமார்

அவரின் காரில் இருந்து சுமார் 500 கிலோ மதிப்பிலான குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.  மேலும் அவரின் கூட்டாளியான பீளமேடு பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரையும் கைது செய்தனர்.

அவரின் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். மொத்தமாக சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குட்கா  நெட்வொர்க்குக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

குட்கா FIle Photo

அவர்தான் குட்கா பொருள்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி  வைத்துள்ளார். இதையடுத்து முகேஷை பிடிப்பதற்காக கோவை போலீஸார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.