உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹாவில் அரசு உதவிப் பெறும் ஹில்டன் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வருடன் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தாய் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான செய்தியில், மாணவர்கள் உணவருந்தும் பகுதிக்கு தலைமை ஆசிரியர் வந்திருக்கிறார். அங்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் அசைவ உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதைப் பார்த்த தலைமை ஆசிரியர், அந்த மாணவனை மட்டும் தனி அறையில் அடைத்திருக்கிறார். மேலும், மாணவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாக அந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. உடனே பள்ளிக்கு வந்த அந்த மாணவனின் தாய், தலைமை ஆசிரியருடன் பேசும் அந்த வீடியோதான் வைரலாகியிருக்கிறது.
அந்த வீடியோவில், “அந்த மாணவர் தொடர்ந்து அசைவ உணவை கொண்டுவந்து, மற்ற மாணவர்களை சாப்பிட வைப்பதன் மூலம் மதம் மாற்ற விரும்புகிறார். இந்து கோயில்களை இடிக்க வேண்டும் எனக் கூறுகிறார். இப்படிப்பட்ட மாணவனை எங்கள் பள்ளியில் படிக்க வைக்க வேண்டியதில்லை. மாணவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டோம்” எனக் கூறுகிறார்.
அப்போது பேசிய அந்த மாணவனின் தாய், “கடந்த மூன்று மாதங்களாக வகுப்பில் இந்து – முஸ்லிம் என பிரிவினைப் பார்ப்பதாக என் மகன் கூறுகிறார். இதைத்தான் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறீர்களா… வகுப்பில் உட்கார அனுமதிக்காமல், தனி அறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்…” எனப் பேசுகிறார்.
இந்த வீடியோ தொடர்பாக அந்த பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த பேட்டியில், “நான் சிறுவனை அடிக்கவில்லை, ஒரு ஆசிரியரின் மேற்பார்வையில் கணினி அறையில்தான் அடைத்து வைத்தேன். சிறுவன் பள்ளி வளாகத்தில் உள்ள கோவிலை சேதப்படுத்தியதுடன், தனது வகுப்பு தோழர்களுக்கு பிரியாணி கொடுத்திருக்கிறார். பிரியாணி சாப்பிட்ட மற்ற மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால் அந்த சிறுவனின் தாயார் என் மீது குற்றம்சாட்டியிருக்கிறார்” எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான புகார், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை நிர்வகித்து வரும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளர் (டி.ஐ.ஓ.எஸ்) விபி சிங்கிடம் சென்றிருக்கிறது. இது தொடர்பாக பேசிய அவர், “அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள மூன்று அரசுப் பள்ளிகளின் முதல்வர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த மூன்று பேர் கொண்ட குழுவுக்கு திங்கள்கிழமைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் முதன்மை குற்றவாளி என கண்டறியப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.