உலகளவில் இன்று பேசப்படும் இரண்டு போர்களில் ஒன்று உக்ரைன் – ரஷ்யா, மற்றொன்று இஸ்ரேல் – ஹமாஸ் போர். இதில் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியா ‘பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு எட்டப்பட வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டார். அப்போது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடனான உரையாடலில், ‘இது போருக்கான காலமல்ல’ என உக்ரைன் ரஷ்யா போர் குறித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 23 அன்று உக்ரைனுக்குச் சென்ற மோடி, ‘நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, நேரத்தை வீணடிக்காமல் உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். அமைதியை மீட்டெடுக்க இந்தியாவும் உடன் இருக்கும்’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக புதின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தப் போரைச் சுற்றியுள்ள அனைத்து பிரச்னைகளையும், முதன்மையாக சீனா, பிரேசில், இந்தியா ஆகிய நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டுவர முடியும். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என உண்மையாக முயற்சிக்கும் எங்கள் நண்பர்கள் மற்றும் பங்காளிகளை நாங்கள் மதிக்கிறோம். போர் தொடங்கிய முதல் வாரங்களில், இஸ்தான்புல்லில் ரஷ்ய – உக்ரைன் பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட ஒப்பந்தம் இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையாக அமையும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,“ மோடிக்கும் புதினுக்கும் இடையே தற்போதுள்ள ஆக்கபூர்வமான, நட்புரீதியான உறவின் மூலம், இந்தப் போர் தொடர்பான உரையாடலை நிறுவுவதற்கு இந்தியா உதவ முடியும். இந்தப் போரில், பங்கேற்கும் உக்ரைன், அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து நேரடியாக தகவல்களைப் பெறுவதற்கு இந்தியப் பிரதமரால் முடியும். உலக விவகாரங்களில் இந்தியா தனது பலத்தை நிறுவவும், அமெரிக்கர்கள், உக்ரேனியர்களின் அரசியல் விருப்பத்தை அறிந்து கொள்ளவும், அமைதியான தீர்வை எட்டுவதற்கும் இந்தியா அதன் செல்வாக்கைப் பயன்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY