ரஷ்ய அதிபர் புதினுகுக்கு அவரது காதலியான அலினா கபேவாவுடன் இரண்டு மகன்கள் இருக்கும் செய்தி 2022ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. முதல் மகன் இவான் (9) மற்றும் இரண்டாவது மகன் விளாடிமிர் புதின் (ஜூனியர்) (5) என தற்போது அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கைமுறைப் பற்றிய விஷயங்கள் வெளியே தெரிய வந்திருக்கின்றன.
இதுவரை ரஷ்ய அதிபருக்கு அவரது முன்னாள் மனைவியுடன் மரியா (39), யெகத்ரீனா (37) என இரண்டு மகள்கள் இருப்பதை நாம் அறிவோம்.
இவர்கள் மட்டுமின்றி ஸ்வெட்லானா கிரிவோனோகிக் என்ற பெண்ணுடன் லூசியா என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்தப் பெண் குழந்தை குறித்த தகவல்கள் நீண்ட நாளுக்கு ரகசியமாக பாதுகாக்கப்பட்டது.
புதின் மற்றும் அலினாவின் மகன்கள் இளவரசர்களைப் போல ஸ்விட்சர்லாந்தில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் பொதுவெளியில் தோன்றுவது இல்லை. சொகுசு படகுகளிலும் பிரைவேட் ஜெட்களிலும் பயணிக்கின்றனர் என சுயாதீன செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.
புதினின் மகன்கள் வீட்டிலேயே பாடம் கற்கின்றனர். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்.
புதின் அவரது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்வதில்லை. மகன்களைக் கூட அடிக்கடி சந்திப்பது கிடையாது. அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாவதையும் அவர் விரும்பமாட்டார்.
இவான் 2015-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்திலும், விளாடிமிர் புதின் 2019-ல் மாஸ்கோவிலும் பிறந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைகள் பிறக்க வேண்டிய இடத்தை புதினே தேர்வு செய்தாராம்.
முதல் ஆண் குழந்தை பிறந்தபோது புதின் உற்சாகமாக “ஹுர்ரே! இறுதியாக ஒரு ஆண் குழந்தை!” என கத்தியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
கடந்த 2022ம் ஆண்டு புதினின் காதலி அலினா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் குழந்தைப் பிறப்பு குறித்த பதிவுகள் எதுவும் இல்லை.
புதினின் மகள்களுக்குப் பிறந்த பேரன், பேத்திகளும் இருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாவதில்லை.
“என் பேரக் குழந்தைகள் ரஷ்யாவில் பிறந்தனர். ரஷ்யாவில் தான் வாழ்கின்றனர். குடும்பத்தைப் பற்றி நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. அவர்களுக்கு தனியாக அவர்களது வாழ்க்கை இருக்கிறது, அதை அவர்கள் வாழ்கின்றனர். மக்கள் வெளிச்சத்தில் அவர்கள் இளவரசர்களைப் போல வாழ்வதை நான் விரும்பவில்லை” என புதின் கூறியிருக்கிறார்.