மகா விஷ்ணு:`இன்னைக்கு தேதியில் ஆஸ்திரேலியாவுல இருக்கேன்;அடுத்து சிங்கப்பூர்’- யார் இந்த சர்ச்சை நபர்

ஸ்டாண்ட் அப் காமெடியனாக டிவியில் அறிமுகமாகி இப்போது ஆன்மிகவாதியாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் மகா விஷ்ணு, அரசுப் பள்ளிகளில் நடத்திய போதனை வகுப்புகளுக்குக் கண்டனங்கள் பல்வேறு தரப்பிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

குருகுல கல்வி, மறுபிறவி என இவர் பேசிய பல விஷயங்களுக்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். ஆசிரியர் ஒருவர் மகா விஷ்ணு பேசியதை எதிர்த்து கேள்வி எழுப்பும் காணொலியைப் பகிர்ந்து பலரும் இவரை எதற்காக அரசுப் பள்ளிகளுக்கு அழைக்கிறார்கள் எனத் தெரிவித்து வந்தனர். இத்தனை ஆண்டுகளாக எதற்கெல்லாம் எதிராக திராவிட அமைப்புகள் பேசி வந்ததோ, அதை ஆதரிக்கும் விதமாக பேசுகிற இவரை எப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்தியில் பேச அனுமதிக்கலாம் என பள்ளி கல்வித் துறை அமைச்சரைக் கண்டித்து பலரும் பதிவிட்டனர். இதையொட்டி, தமிழக முதல்வரும், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் விளக்கமளித்திருக்கின்றனர்.

அன்பில் மகேஸ் – மகா விஷ்ணு

திடீரென் இப்படி கவனம் பெற்ற மகா விஷ்ணுவின் பின்னணி குறித்து விசாரித்தோம். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மகா விஷ்ணு கலந்துகொண்டபோது அவருடன் பழகிவந்த நண்பர்களிடம் பேசினோம். அவர்கள் கூறியது ” இவர் ஆரம்பத்துல ஸ்டாண்ட் அப் காமெடியன். இவர் கலந்துகொண்ட அந்த சீசன் முடிந்ததும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கல. அந்த ஒரு புகழை வச்சே என்ன பண்ணலாம்னு யோசிச்சுதான் ஈவென்ட் பக்கம் போனார். பள்ளி, கல்லூரிகள் இவரை மாதிரி ஆட்களை கூப்பிடுறதைத் தனக்குச் சாதகமாக்கிட்டார். அங்க போய் பேசினார். அதை தன்னம்பிக்கை பேச்சு என பிரபலப்படுத்தனிார். தொடர்ந்து ஒரு என்.ஜி.ஓ தொடங்கினார்.

மகா விஷ்ணு

தன்னுடைய டிவி புகழை வச்சே பிரபலங்கள், அரசியில் வாதிகள் பலர் கூடவும் பேசி அதன் மூலமா தனக்குக் கிடைத்த பிரபல்யத்தைப் பயன்படுத்திட்டார். இதுக்கிடையில் ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்துல போய் யோகா கத்துகிட்டார்னும் சொல்றாங்க. மொத்தத்துல நல்லா காசும் பார்த்துட்டார். இப்ப திருப்பூர்ல ஒரு அறக்கட்டளையும் நிறுவியிருக்கிறதா சொல்றாங்க. இதுவரைக்கும் சத்தமில்லாம பள்ளி கல்லூரிகளுக்கு கெஸ்டா போய் வந்திட்டிருந்தவரை இப்ப சென்னையில தந்த போதனைகள் வெளியுலகத்துக்குக் காட்டியிருக்கு ” என்கிறார்கள் அவர்கள்.

டிவி புகழ் சலித்துப்போய் ஒரு கட்டத்தில் வருமானம் குறைந்து விட பக்காவான ஒரு மார்க்கெட்டிங் டீமை தனக்கென உருவாக்கிக் கொண்டார் இவர் என்கிறார்கள். ” தொடர்ந்து யோகா மாதிரியான சில விஷயங்களைக் கத்துக்கிட்டு திரும்பவும் நிகழ்ச்சிகள் பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் அந்த மார்கெட்டிங் டீம். ‘ பத்து வருஷத்துல பாருங்க, பெரிய ஆளா இருப்பார் இவர் ‘ எனச் சொல்லியே அந்த மார்க்கெட்டிங் டீம் இவருக்காக பி. ஆர் வேலை செய்திருக்கிறது.

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சர்ப் பேச்சு

பளீரென்ற வெள்ளுடை, பரம் பொருள் அறக்கட்டளை என்ற பின்னணியில் பவிசாக வலம் வந்த மகா விஷ்ணு பள்ளிகளில் பேசிய பேச்சுகள்தான் இப்போது அவருக்குக் சிக்கவைத்திருக்கிறது. பாவ புண்ணியம், முன் ஜென்மம் என சகட்டு மேனிக்கு எடுத்து விட இப்போது அரசு தலையிட்டு இந்த மாதிரி பேச யாரையும் அனுமதிக்காதீர்கள்’ என அறிக்கை வெளியிடுமளவுக்கு சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து மகா விஷ்ணு தரப்பிடம் பேசியபோது, “சுவாமி இன்னைக்கு தேதியில் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அடுத்து சிங்கப்பூர் செல்கிறார். அதனால் வந்து பேசுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார்” என்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.