லேட்டஸ்ட்டாக ஒரு நியூஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள்! குஜராத்தில் மோர்பி என்ற இடத்தில் போலி டோல்கேட் உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளாகக் கட்டணம் வசூலித்து கோடிக்கணக்கில் ஏமாற்றிய சம்பவம் உங்களுக்குத் தெரியும்தானே! அதன் பிறகு டோல்கேட்களைப் பார்த்தாலே கொஞ்சம் டர் அடிக்கத்தான் செய்கிறது.
இப்போது புதிய செய்தி. தமிழ்நாட்டில் எக்ஸ்ட்ராவாக 3 டோல்கேட்களைத் திறந்துள்ளது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகப் பயணம் செய்பவர்களுக்கு இந்தச் செய்தி.
விழுப்புரம் மாவட்டத்தில் நங்கிளிகொண்டான் என்ற இடத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கரியமங்கலம் பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாகம்பட்டி எனும் ஏரியாவிலும் இந்த டோல்கேட்கள் புதிதாக முளைத்துள்ளன.
கட்டணம் எவ்வளவு என்பதையும் நிர்ணயித்திருக்கிறார்கள். நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான ஒன்வே கட்டணமாக கார்களுக்கு ரூ.60 முதல் ஹெவி வெஹிக்கிள்களுக்கு ரூ.400 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே ஒரே நாளில் திரும்பி வரும் கட்டணம் என்றால், ரூ.95 முதல் 600 ரூபாய் வரை கட்டணம்.
இதுவே கரியமங்கலம் டோல்கேட்டில், ஒருமுறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை கட்டணம். ஒரே நாளில் திரும்பி வருவதென்றால், ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டியில் ரூ.60 முதல் ரூ.400 வரை கட்டணம்.
லேட்டஸ்ட்டாகத்தான் ஜூன் மாதம் முதல் தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளுக்குக் கட்டண உயர்வை அறிவித்திருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு முதல் 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தியிருந்தார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டில் சுமார் 67 சுங்கச்சாவடிகள் இயங்கிவரும் நிலையில், இப்போது 70 ஆக உயர்ந்திருக்கிறது.
போன நிதியாண்டில் சுமார் 4,221 கோடி ரூபாய் வசூல் செய்து, சுங்கச்சாவடி வசூலில் தமிழ்நாடு, தேசிய அளவில் 5-வது இடத்தில் இருந்தது. அடுத்த நிதியாண்டில் முதல் இடத்தில் இருக்கும் உத்திரப்பிரதேசத்தைக் கீழே தள்ளிடுமோ நம்ம ஊரு?
இந்த புதிய டோல்கேட் குறித்த உங்கள் கருத்துகளைக் கமென்ட்டில் பதவிடுங்கள்!