தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள இந்தளூர் மேல தெருவைச் சேர்ந்த சுந்தர். இவரின் மகன் சாய்ராம் வயது 14. இவர் வேங்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கபடி வீரரான சாய்ராம் சிறப்பாக ஆடி வந்ததால், அப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் மத்தியில் பரிச்சயமானவராக இருந்துள்ளார்.
இன்று காலை சாய்ராமுக்கு காதணி விழா நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாட்டை அவரின் பெற்றோர் செய்திருந்தனர். இந்நிலையில் காலை தனது வீட்டிலிருந்து சாய்ராம் தன்னுடைய அண்ணன் முரளியுடன் கல்லணை கால்வாய் ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். படித்துறையில் இறங்கி இருவரும் குளித்துக் கொண்டு இருந்துள்ளனர். தண்ணீர் அதிகமாகவும், வேகமாகவும் இருந்துள்ளது. இதில் சாய்ராம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைக் கண்டு பதறிய முரளி, கதறியிருக்கிறார்.
உடனே, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். சாய்ராமை காணவில்லை. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைவாக வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி சாய்ராமைத் தேடியுள்ளனர். இதில் படித்துறையிலிருந்து கொஞ்ச தூரத்திலேயே சாய்ராமை சடலமாக மீட்டனர். சாய்ராமுக்கு காதணி விழா நடக்க இருந்த நிலையில், உறவினர்கள் பலரும் அவரது வீட்டுக்கு வந்திருந்தனர். அனைவரும் கொண்டாட்ட மன நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் சாய்ராம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததால், அவரது வீட்டில் இருந்தவர்கள் கதறினர். `எங்க புள்ளைக்கு காது குத்தி, அவனை மாலையும், கழுத்துமா பார்க்க ஆசைபட்டோம். இப்படி நடக்குமுன்னு நாங்க கனவிலும் நிலைக்கலை… எம் புள்ளைய இப்படியா பாப்போம்?’ எனக் கூறி சாய்ராமின் பெற்றோர் கதறியது, கிராமத்தினரையே கலங்கச் செய்தது.