மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் (PM SHRI Scheme) விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், தமிழ்நாடு அரசும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, `மும்மொழிக் கொள்கை அடங்கிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கு நிதி ஒதுக்குவோம்’ என மத்திய அரசு நிர்பந்திப்பதாகத் தமிழ்நாடு தி.மு.க அரசு குற்றம் சாட்டுகிறது.
மறுபக்கம், “கல்விக்கு நிதி ஒதுக்கிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதில் தி.மு.க அரசுக்கு என்ன பிரச்னை. தனிப்பட்ட அரசியல் சுயநலத்துக்காக தி.மு.க எதிர்க்கிறது” என பா.ஜ.க மத்திய அரசு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு தெளிவற்றதாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருக்கிறார். முன்னதாக, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், கேள்வி பதில் நேரத்தின்போது ஆசிரியர்கள் தரப்பிலிருந்து எழுந்து பேசிய ஒருவர், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் குறித்து குழப்பம் நிலவுவதாகக் கூறி, திட்டம் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் விளக்குமாறு ஆளுநரிடம் கோரினார்.
அதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “பி.எம்.ஸ்ரீ திட்டம் என்பது மேம்படுத்தப்பட்ட கற்பித்தல் பற்றியது. இந்தியா மிகப்பெரிய நாடு. எந்தவொரு திட்டம் கொண்டுவந்தாலும், முழுமையாக சென்றடைய நேரமாகும். நாட்டில் பரவலாக இருக்கும் அணைத்து வசதிகள் கொண்ட பள்ளிகளைப் போல, குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாடு முழுவதும் மத்திய அரசின் கூடுதல் நிதியோடு பள்ளிகளை அமைக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம். இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. அதில் மாநில அரசு ஒப்புக்கொண்ட பிறகு மத்திய அரசு நிதி ஒதுக்கும். பெரும்பாலான மாநிலங்கள் இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டன. சில மாநிலங்கள் நிலுவையில் வைத்திருக்கின்றன. இன்னும் சில மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
அவர்கள் கையெழுத்திடவில்லையென்றால், அந்தத் திட்டத்துக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்காது. ஆனால், நம் மாநிலம் (தமிழ்நாடு) இதில் இன்னும் தெளிவற்றதாக இருக்கிறது. முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கையெழுத்திட்ட பிறகு மறுத்துவருகிறது. பி.எம்.ஸ்ரீ திட்டம் மிகவும் முற்போக்கான திட்டம். இதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால், புதிய தொழில்நுட்பங்களுடன் கற்பித்தல் முறையை இன்னும் மேம்படுத்த முடியும். ஒருநாள் அதை அவர்கள் செய்வார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.
ஆளுநரின் இத்தகைய பேச்சுக்கு நெல்லையில் எதிர்வினையாற்றியிருக்கும் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, “இஸ்ரோவில் உயர் பதவியிலிருந்து சாதனை நிகழ்த்தி வருபவர்கள் தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான் என்பது ஆளுநருக்கு தெரியாதா? இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோரும் தற்போது பணியில் உள்ள வீரமுத்துவேல், வனிதா, நிகர் ஷாஜி, நாராயணன், ராஜராஜன், சங்கரன் உள்ளிட்ட பலரும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான். தமிழ்நாட்டின் பாடத்திட்டம் என்ன என்பது ஆளுநருக்கு முழுமையாக தெரியுமா என்று தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.