`ரேஷன் பொருளுக்கு லக்கேஜ் டிக்கெட் எடுங்க..’ – பார்வையற்றவரை பாதியில் இறக்கிவிட்ட அரசு பஸ் ஊழியர்கள்

தென்காசி மாவட்டம், கடையம் அருகே ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு அரசுப் பேருந்தில் வீடு திரும்பிய பார்வையற்ற நபரை, பாதிவழியில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இறக்கிவிட்ட சம்பவம், நடந்திருக்கிறது.

பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, கண் பார்வையற்றவர். இவர், மனைவியுடன் தற்காலிகமாக பாவூர்சத்திரத்தில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், பொட்டல்புதூர் நியாய விலைக்கடையில் இலவச ரேஷன் அரிசியை வாங்குவதற்காக வந்த கந்தசாமி, பொருள்களை வாங்கிக்கொண்டு தன் மனைவியுடன் பாவூர்சத்திரத்திற்குப் புறப்பட்டுள்ளார். அப்போது, அகஸ்தியர்பட்டி – பாவூர்சத்திரம் சென்ற அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர்.

கந்தசாமி

`எங்கிட்ட லக்கேஜ் எடுக்க காசு இல்லைய்யா…’

தொடர்ந்து, கண் பார்வையற்றவர்களுக்கான இலவச பயண அனுமதிச் சீட்டைக் காண்பித்து கந்தசாமி பயணித்தபோது, அவர் வைத்திருந்த ரேஷன் பொருள்களுக்கும் லக்கேஜ் டிக்கெட் எடுக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துனர் கூறியுள்ளார். அப்போது, ‘டிக்கெட் எடுக்க காசில்லாமத்தான் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு பஸ்பாஸில் வந்து, திரும்ப வீட்டுக்குப் போறேன். எங்கிட்ட லக்கேஜ் எடுக்க காசு இல்லைய்யா’ என கந்தசாமி கூறியுள்ளார். இந்த நிலையில் கோபமடைந்த பேருந்து நடத்துனர், ‘கண் பார்வை இல்லைன்னா.., வீட்டில் கிடக்க வேண்டியதுதானே..’ என மனது புண்படும்படி பேசியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பார்வையற்ற நபரான கந்தசாமியையும் , அவரின் மனைவியையும் பாதி வழியிலேயே போக்குவரத்துப் பணியாளர்கள் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வயதான தம்பதியினர் நடுவழியில் தவிப்பதைப் பார்த்தவர்கள், விரைந்துவந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டிக்கெட்

பார்வையற்றவர் என்று தெரிந்தும் அவரிடம் கடுமையான முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனர், ஓட்டுநர் ஆகியோர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டு கந்தசாமி, பாபநாசம் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்தசாமியின் புகார் குறித்து பாபநாசம் கிளை போக்குவரத்து மேலாளரிடம் கேட்டோம். “மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அரசால் வழங்கப்பட்டிருக்கும் இலவச பயண அனுமதிச் சீட்டின் அடிப்படையில் அரசுப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்படுகிறது. அதேசமயம் அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களுக்கு டிக்கெட் எடுப்பது அவசியமாகிறது. பேருந்தில் பயணிகள் எடுத்துச் செல்லும் துணிமணிகள், லெதர் பேக் போன்றவற்றின் தன்மையின் அடிப்படையில் குறிப்பிட்ட எடை அளவு வரை இலவசமாக அனுமதிக்கப்படும். இதுவே மூட்டை, பூ, டி.வி என எடுத்துச் செல்லும் மெட்டீரியலின் தன்மையைப் பொறுத்து லக்கேஜ் டிக்கெட் வசூலிப்பது வழக்கமான நடைமுறைதான். இருந்தாலும் முதியவர் கந்தசாமியின் புகார்மீது முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணியாளர் என்பதால், அவருக்கு தற்சமயம் பணி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். அதேபோல பேருந்து நடத்துனரிடம் விளக்கம் கேட்டு விளக்கக்கடிதம் பெறப்பட்டுள்ளது. அதன்மீது துறைரீதியான விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு மேலதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் அவருக்கும் பணி வழங்கப்படவில்லை” என்றார்.