தஞ்சாவூர், ராஜப்பா நகரைச் சேர்ந்தவர் சந்திரன் வயது 29. கட்டட வேலை செய்கின்ற கூலித்தொழிலாளி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கான்கிரீட் போடும் பணிக்குச் சென்ற சந்திரன் கலவை மிஷினில் சிமெண்ட், ஜல்லி, மணல் போட்டு கலவை போட்டு கொடுத்துள்ளார். கான்கிரீட் முடிந்ததும் கலவை மிஷினை துடைத்து சுத்தம் செய்வது வழக்கம். அப்போது மிஷினை ஓட விட்டு துடைப்பார்கள். அதே போல் சந்திரன், கலவை மிஷினை ஓடவிட்டு துணியால் சுத்தம் செய்துள்ளார். இதில் துணியோடு சேர்த்து அவரது வலது கையையும் மிஷினில் சிக்கிக் கொண்டதில் அவருடைய வலது கை முட்டிக்கு கீழ் தனியாக துண்டானது.
மற்ற தொழிலாளர்கள் பதறித் துடித்துள்ளனர். இதில் எலும்புகள் நொருங்கியதால் துண்டான அவரது கையை மீண்டும் ஒட்டவைத்து சேர்க்க முடியாது என சொல்லி விட்டார்கள் டாக்டர்கள். கட்டடத்தொழிலுக்கு முக்கியமே கை தான் அது இல்லாமல் போனதில் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார். 50 வயதை தாண்டிய அவரது அம்மா சித்தாள் வேலைக்குச் சென்று தன் மகன் சந்திரனை கவனித்து வந்துள்ளார்.
அம்மா, தன் வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தை மட்டும் பாத்திருக்கு. இப்ப எனக்கு கை இல்லாம போனதுல நானும் அம்மாவுக்கு பாரமாகிட்டேன். என்னால அம்மா கஷ்டபடக் கூடாதுனு நினைத்த சந்திரன் ஒற்றை கை இல்லாத நிலையிலும் மீண்டும் தன்னம்பிக்கையோடு கட்டட வேலை பார்த்து வருகிறார். பயமில்லாமல் பழையபடி கான்கிரீட் மிஷினில் கலவை கலந்து கொடுக்கிறார். ஒற்றை கையுடன் உயரமான கட்டடத்தில் ஏறி வேலை செய்கிறார். அவரை பார்ப்பவர்கள் அவரது நிலையை கண்டு கலங்குகின்றனர். அவரோ, பசினு யார்கிட்டேயும் கையேந்தி நிக்காம உழைச்சி சாப்பிடுறதும் ஒரு சுகம் தானு நம்பிக்கையை உதிர்க்கிறார்.
இது குறித்து நம்மிடம் பேசிய சந்திரன் , “என்னோட அப்பா செல்வம் மதுக்கு அடிமையானவர். எந்த நேரமும் போதையிலேயே இருப்பார். அம்மா வீரம்மாளிடம் சண்டை போடுவார் அடிப்பார். சின்ன வயசில நாங்க ஈரோட்டில் இருந்தோம். அப்பாவோட தொல்லை தாங்க முடியாமல் என்னையும், அக்காவையும் அழைச்சிக்கிட்டு அம்மா தஞ்சாவூருக்கு வந்துட்டாங்க. அக்காவும், நானும் அப்ப சின்ன பிள்ளைகள். அம்மா, சித்தாள் வேலைக்கு பாத்து எங்களை ஆளாக்கினார். நாங்க மூணு வேலை சாப்பிடுறதுக்கு அம்மா கடுமையா உழைச்சார். குருவி சேக்குறாப்புல பணத்தை சேர்த்து அக்காவுக்கு கல்யாணம் செஞ்சி வச்சார். என்னை ப்ளஸ் ஒன் வரைக்கும் படிக்க வச்சார்.
15 வயசுல கட்டட வேலைக்கு போயிட்டேன்…
அதன் பிறகு அம்மாவுக்கு தொடர்ந்து வேலை பாக்க முடியலை. அதனால் படிப்ப நான் பாதியில நிறுத்திட்டு 15 வயசுல கட்டட வேலைக்கு போயிட்டேன். எனக்கு கிடைத்த வருமானத்தில் அக்காவுக்கு வேண்டியதை செஞ்சேன். அம்மாவை குறையில்லாம பாத்துக்கிட்டேன். அம்மாவும் சும்மா இல்லாம அப்பப்ப வேலைக்கு போகும். உழைச்ச காசுல எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்தோம். இந்த சூழலில் தான் கான்கிரீட் வேலை பாத்தப்ப கலவை மிஷினில் சிக்கி என் வலது கை துண்டானது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். சுமார் ஒன்றரை லட்சம் செலவானதே தவிர கையை ஒட்ட வைக்க முடியலை. அந்த சமயத்துல, முட்டிக்கு கீழ் அதுவும் வலது கை இல்லாம இனி நான் எப்படி வேலைக்கு போவேன், உன்னை பார்த்துப்பேனு அம்மாவ கட்டிக்கிட்டு கலங்கினேன்.
நான் இருக்குற வரைக்கு உனக்கு ஒரு குறையும் வராதுடானு அம்மா திரும்பவும் வேலைக்கு போனுச்சி. கிட்டதட்ட ஆறு மாசம் நான் படுத்த படுக்கையா கிடந்தேன். சின்ன வயசிலிருந்தே அம்மா கஷ்டத்த தவிர வேற எதையும் அனுபவிக்கல. என்னை கரைசேர்க்க அம்மா திரும்பவும் கஷ்டப்படுறத நான் விரும்பல. அதனால் முடங்கி கிடந்த நான் திரும்பவும் கட்டட வேலைக்கு போனேன். ஒத்தை கையை வச்சிக்கிட்டு எப்படி வேலை பார்ப்பனு பலரும் பேசினாங்க.
இதுதான் என்னோட பெரிய ஆசை…
அதை காதில் வாங்கி கொள்ளாத நான், தன்னம்பிக்கையோடு வேலைக்குச் சென்றேன். கலவை மிஷினால் எனக்கு கை போனதால் அந்த வேலையை பார்க்க வேண்டாம் என்றனர். ஆனால் நான், அந்த வேலை உள்பட எல்லா வேலையும் பார்க்கிறேன். கான்கிரீட்டில் கொட்டப்படும் கலவையை மண்வெட்டி கொண்டு நிரவி விடுவேன். எவ்வளவு உயரமான கட்டடமாக இருந்தாலும் வேலை பார்ப்பேன். ஆனாலும் ஒத்தை கை மட்டும் இருப்பதால் முன்ன மாதிரி யாரும் வேலைக்கு கூப்பிடுவதில்லை. அதான் ரொம்ப கஷட்மா இருக்கு. எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமுனு அம்மாவுக்கு ஆசை. அழைஞ்சி பெண் பார்க்குது. ஒத்தை கை இல்லாததால் பெண் தர மறுக்குறாங்க.
மாற்றுத்திறனாளி அட்டை வாங்கினால் உதவித்தொகை கிடைக்குமுனு சிலர் சொன்னதால் அட்டை வாங்கினேன். ஆறு மாசத்துக்கு மேல் ஆச்சு, எப்ப கேட்டாலும் புதிய அட்டைக்கு இன்னும் பணம் போடவில்லை என்கிறார்கள். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை, சித்தி வீட்டில் ஓரத்தில் வாழுறோம். அரசு, எங்களுக்கு இலவச பட்டாவோ, அல்லது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீட்டை கொடுத்தால் போதும் நான் உழைச்சி பிழைச்சிக்குவேன். அம்மாவைவும் கடைசி காலத்தில் கண்கலங்காம பார்த்துக்குவேன். சொந்தமாக வீடு மட்டும் இருக்க வேண்டும் இது என்னோட பெரிய ஆசை” என்றார்.