செங்கோட்டை திமுகவுக்குள் கோஷ்டி பூசல்; நகரச் செயலாளர் – கவுன்சிலர் மோதல்… நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில், திமுக கட்சிக்குள் கோஷ்டிபூசல் காரணமாக ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியினரிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் செங்கோட்டை நகராட்சியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நகர்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், செங்கோட்டை நகர தி.மு.க. நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொள்வதற்கு நகரச் செயலாளர் வெங்கடேஷன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கவுன்சிலர்

ஆனால், கட்சியில் இளைஞரணி பொறுப்பாளரும், செங்கோட்டை நகராட்சியின் 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலருமான இசக்கித்துரை என்பவருக்கு உட்கட்சிபூசல் விரோதம்‌ காரணமாக நகரச் செயலாளர் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது தகவல் அறிந்து கவுன்சிலர் இசக்கிதுரை அங்கு வந்தார். இதைப்பார்த்த நகர் செயலாளர் வெங்கடேசன், ‘நீ.. ஏன் கூட்டத்திற்கு வந்தாய்’ எனக்கேட்டு இசக்கித்துரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த இடமே பரபரப்பானது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பானது. இருவருமே ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் கவுன்சிலர் இசக்கித்துரையை, நகர செயலாளர் வெங்கடேசன் தரப்பை சேர்ந்தவர்கள் பைக் சாவியால் முகத்தை கீறியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சக கட்சியினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.” என்றார்.

சிகிச்சை

இந்த சம்பவத்தில் காயமடைந்த இசக்கித்துரை, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோஷ்டி பூசல் காரணமாக நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில், தி.மு.க.நிர்வாகிகள் இடையே உட்கட்சி பூசல் காரணமாக அடுத்தடுத்த மோதல் சம்பவம் நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.