இளைஞர்கள் வேலை தேடி அலையும் இந்த காலத்தில், சில இளைஞர்கள் `வேலை தேடுபவனாக இருக்காதே வேலை கொடுப்பவனாக இரு’ என்ற சூத்திரத்தைப் பின்பற்றுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் ஸ்டார்ட்அப் (startup), ஆன்டர்பிரனர்ஷிப் (Entrepreneurship – சுயதொழில் முனைவு) போன்ற தொழில் ஆர்வங்கள் அதிகரித்து வருகின்றன.
ஸ்டார்ட்அப் மற்றும் ஆன்டர்பிரனர்ஷிப் போன்றவைகளைப் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாணயம் விகடனும், சத்யபாமா கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களும் `STARTUP FEST – 2024′ என்ற நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்வில் கிஸ்ஃப்லோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக இயக்குநருமான சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றிய அறிவுரைகளையும் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களும் நிர்வாகிகளும் நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சுமார் 31 நிறுவனங்களின் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அதில், பாலம் சில்க்ஸ் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவி, ரிவர் என்.ஜி.ஓ நிறுவனர் மது சரண் ஆகியோர் பெண்களின் தொழில் முன்னேற்றத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஜெயஸ்ரீ ரவி, `பட்டு என்பது அந்த காலத்தில் மிக உயர்ந்த ஒரு ஆடை. எல்லாப் பெண்களாலும் அதை எளிதில் வாங்கிவிட முடியாது. இதை மாற்றும் எண்ணத்துடன்தான் இந்த நிறுவனத்தை நிறுவினேன். ஒரு பெண்ணாக நான் இதைத் தொடங்கும்போது நிறைய சவால்களைச் சந்தித்தேன். பின்னர், அதைக் கடந்து வந்தபோது எங்களுக்கு பெரும் வெற்றி காத்திருந்தது. 2003-ல் நிறுவனத்தை தொடங்கினோம். 2013-ல் ஷாருக் கான் நடிப்பில் வெளியான `சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு நாங்கள்தான் சேலைகள் செய்து கொடுத்தோம்’ என்று தனது வெற்றி பயணத்தின் சில மைல்கல்களைப் பற்றிக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் உறவு, வேலைகளில் ஏற்படும் நஷ்டங்கள், அதைச் சரிசெய்யும் விதம் பற்றி அறிவுரை வழங்கிய உழவர்பூமி நிறுவனத்தின் நிறுவனர் வெற்றிவேல் பழனிச்சாமி, `எந்தத் தொழிலாக இருந்தாலும் நம்மிடையே ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள தனித்துவம் விவசாயிகள் கொடுக்கும் பாலை எந்த வித கலப்படமும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு தரமான பாலாகவே தருவதுதான். ஆரம்ப காலங்களில் பால் திரிந்து போதல், காலதாமதமாக வாடிக்கையாளர்களைச் சேர்வது போன்ற பல பிரச்னைகள் எழுந்தன.
ஒவ்வொரு முறை நாங்கள் பிரச்னைகளை எதிர்கொண்டபோதும் எங்களை மீட்டெடுத்தது வாடிக்கையாளர்களும், விவசாயிகளும்தான். முக்கியமாக, அதுபோன்ற சமயங்களில் யாரோ ஒரு விவசாயியோ, வாடிக்கையாளரோ எங்களுக்கு போன் செய்து எங்களுக்காக காத்திருப்பதாகச் சொல்வார்கள். அதுதான் எங்களுக்கும் மீண்டும் ஒரு உத்வேகத்தைத் தரும். எல்லாவற்றையும் தாண்டி தரமான பொருளை மக்களுக்குத் தருகிறோம் என்ற திருப்திதான் எங்களின் பெரும் வெற்றி’ என்று வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இறுதியில், தோல்விகளும் எவ்வளவு முக்கியம், அதை எப்படிக் கடந்து வருவது என்பது குறித்து பேசிய SANAL நிறுவனத்தின் நிறுவனர் தக்க்ஷிணாமூர்த்தி, `ஸ்டார்ட்அப்-பை பொறுத்தவரையில் தோல்விகள்தான் முக்கியம். தோல்விகள்தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நம்மை நகர்த்தும். தோல்விகளை எதிர்கொள்ளாமல் யாரும் இந்தத் துறையில் வெற்றிபெற முடியாது.
நம்மில் பலரும் தோல்விகளை நினைத்தே எந்த செயலையும் தொடுவது இல்லை. SANAL என்னுடைய 23-வது ஸ்டார்ட்அப். இதற்கு முன் 22 முறை தோல்விகளையே சந்தித்தேன். அதனால் கிடைத்த அனுபவங்களும், யோசனைகளும்தான் இப்போது நாங்கள் பெற்ற வெற்றிக்கு அடித்தளம்’ என்று தோல்வி கற்பித்த படிப்பினையை எடுத்துரைத்தார்.
இந்த விழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள் பலரும், தங்கள் ஸ்டார்ட்அப் யோசனைகளைக் காட்சிப்படுத்தி, வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து பணி நியமன ஆணை, பயிற்சி ஆணை போன்றவற்றைப் பெற்றுக்கொண்டனர். மொத்தத்தில், ஸ்டார்ட்அப் குறித்து மாணவர்களிடமிருந்த சந்தேகங்களையும், ஸ்டார்டஅப் பற்றிய விழிப்புணர்வையும் தெளிவுபடுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.