Tasmac: `டாஸ்மாக்கில் இனி பில்லிங் மிஷின்; காரணம் இதுதான்’ – அமைச்சர் முத்துசாமி விளக்கம்

டாஸ்மாக்கில் விற்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் முறையாக கணினி மூலம் பில்லிங் செய்யப்பட்டு, அதன் ஒவ்வொரு தரவுகளையும் கணினி மூலம் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கை.

டாஸ்மாக்

இந்நிலையில் டாஸ்மாக்கில் தற்போது விற்பனை குறைந்துள்ளது குறித்தும் டாஸ்மாக்கில் பில்லிங் மிஷின் கொண்டு வந்திருப்பது குறித்தும் பேசியிருக்கிறார், தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி.

இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, “மது விற்பனை குறைந்த காரணத்தால் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. இது தவறான தகவல். மது பிரியர்கள் தங்களது மது பழக்கத்தை விட்டு, அதனால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்து, வருமானம் குறைந்தால் அது அரசுக்கு மகிழ்ச்சிதான்.

அமைச்சர் முத்துசாமி

ஆனால் தவறாகக் கணக்குக் காட்டிவிட்டு, டாஸ்மாக் வருமானம் வேறு யாருக்கோ தவறான முறையில் செல்லும் வாய்ப்புகளும் டாஸ்மாக் விற்பனை குறைந்த இந்த விவகாரத்தில் இருப்பதாக சந்தேகமிருக்கிறது. இப்படி முறையான கணக்குகள் இல்லாமலும், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவும் டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மிஷன் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டாஸ்மாக் கணக்குகளை முறைப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.