Aparajita Bill: பாலியல் வன்கொடுமைக்கெதிராக மம்தா நிறைவேற்றிய மசோதாவும்… அதன் அம்சங்களும்!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தோடு நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கும் பாலியல் துன்புறுத்தல்களும், வன்கொடுமைகளும், பெண்களுக்கு எங்குதான் பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி… அனைவரையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறிருக்க, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கடிதம் எழுதினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை – மருத்துவர்கள் போராட்டம்

ஆனால், நேரடியாக மோடியிடமிருந்து பதில் எதுவும் அவருக்குச் சேரவில்லை. அதேமயம், பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 64-ஆனது, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை விதிக்கிறது. மேலும், BNS-ன் பிரிவு 66-ஆனது பாலியல் வன்கொடுமை, அதனுடன் கொலை, பாதிக்கப்பட்டவர்கள் vegetative நிலைக்குச் செல்லுதல் ஆகியவற்றில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கிறது.

நரேந்திர மோடி

ஆனால், இதே பிரிவு 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனையையும் விதிக்கிறது. இவற்றோடு, 18 வயதுக்குட்பட்டவர்களிடம் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தின் தண்டனைகளும் இருக்கின்றன.

இப்படியான சூழலில், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பத்தே நாள்களில் மரண தண்டனை விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்போவதாகக் கடந்த வாரம் மம்தா அறிவித்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் தற்போது கூட்டப்பட்டிருக்கும் இரண்டு நாள் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், `அபரஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024′ இன்று தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மம்தா பானர்ஜி – Aparajita Bill

இந்த மசோதாவானது, மேற்குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் முன்மொழிகிறது. இந்த அபரஜிதா மசோதா நிறைவேற்றப்படுகையில் உரையாற்றிய மம்தா, “பாலியல் வன்கொடுமை தற்போது தேசிய அவமானம். அதைத் தடுக்கத் தேவையான சமூக சீர்திருத்தத்துக்காக ஒன்றிணைவோம்” என்றார்.

இந்த மசோதாவானது பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதா (Anti-Rape Bill) என்றும் அழைக்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தாலோ அல்லது vegetative நிலைக்குச் சென்றாலோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

தண்டனை

இத்தகைய குற்றங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவுகளை குற்றவாளிகள் அல்லது அவர்களின் குடும்பங்கள் ஏற்க வேண்டும். ஒருவேளை அதை அவர்கள் செலுத்தத் தவறினால், அவர்களிடமிருந்து சட்டப்பூர்வ வழிகளில் பெறப்படும்.

இந்தக் குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் மீதான விசாரணையின் முதற்கட்ட அறிக்கை 21 நாள்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த மசோதாவின் கீழ் இத்தகைய குற்றங்களை விசாரிக்க, துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் `அபரஜிதா பணிப் படை’ என்ற பெயரில் மாவட்ட அளவிலான சிறப்புப் படை அமைக்கப்படும்.

தீர்ப்பு

இந்த வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த பிரத்யேகமாக சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படும்.

பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைக் காக்கும் நடவடிக்கையாக, முன் அனுமதியின்றி நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விஷயங்களை வெளியிடுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

சட்டம்

மேலும், இந்த மசோதாவானது பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமையுடன் கூடிய கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுதல், ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் BNS-ன் பிரிவுகள் 64, 66, 70(1), 71, 72(1), 73, 124(1), 124(2) திருத்தங்களை முன்மொழிகிறது. அதோடு, இத்தகைய குற்றங்களில் குற்றவாளிகளின் வயதைப் பொறுத்து தண்டனை வழங்கும் BNS-ன் பிரிவுகள் 65(1), 65(2), 70(2) ஆகியவற்றைத் தவிர்க்கவும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.