நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட 6-வது வார்டு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து பள்ளிச் சுவற்றிலும், சமையலறையின் பூட்டிலும் மனிதக் கழிவை பூசி, மனிதக் கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி அட்டூழியம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு கை மாற்றி, தனிக்குழு அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இப்போது நாமக்கல் மாவட்டத்தில் இப்படியோரு சம்பவம் நடந்துள்ளது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுவதாகக் குற்றம்சாட்டியுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன. தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றைக் கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் அறிவு தீபத்தை ஏற்றும் பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. உலகின் பல பகுதிகளில் இல்லாத இந்த மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான ஒன்று.
அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால் மது அருந்துவோரின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருகின்றன. பள்ளிகளில் உரிய சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு பள்ளிகளில் தேவையான குறைந்தபட்ச உட்கட்டமைப்புகள் இல்லாததால் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் சாதனை ஆட்சி நடத்துவதாக தற்பெருமை பேசும் திமுகவும், முதலமைச்சரும் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.
பள்ளி சுவற்றிலும் பள்ளி சமையலறை பகுதியிலும் மனித கழிவு பூசப்பட்ட செய்தி அதிர்ச்சியோடு பெரும் அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. நாகரிகமற்ற இச்செயலை கண்டிப்பதோடு, இத்தகைய சமூக விரோத வன்மையாகக் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.