பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆய்வக உதவியாளருக்கான பயிற்சி சான்றிதழ் வழங்குதல், பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா அண்ணாசிலை அருகே உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி, பள்ளிக் கல்வி இயக்குநர் கூடுதல் பொறுப்பு பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கினார். மேலும், பயிற்சி கட்டகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றிய போது, “குத்துவிளக்கு ஏற்றும்போது முதல் முதலாக அரசு விழாவில், ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல் பாடியது இதுதான் முதன்முறை. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்த பாடல் போடப்பட்டது. பள்ளி ஆய்வகத்திற்கு ஆய்வு செய்யும்பொழுது திடீரெனதான் செல்வேன். மேலும், பள்ளிகளுக்கு ஸ்டெம் லேப் கொண்டு வந்தோம். பள்ளி என்பது எங்கள் வீடு… பள்ளிக்கூடம் என்பது எங்கள் வாழ்வு என ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். அதே போன்று ஆய்வகத்தில் பணிபுரிவர்கள் இதனை மனதில் வைத்து பணிபுரிய வேண்டும். அடுத்த தலைமுறையை உருவாக்கக்கூடிய பங்கு உங்களிடம்தான் உள்ளது. வருங்காலத்தில் ஒரு கமிட்டி அமைத்து கோரிக்கைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ அந்த அளவுக்கு நிறைவேற்ற வழிவகை செய்யப்படும்” என்றார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மத்திய அரசு நிதி வழங்காதது குறித்து ஏற்கெனவே பல விவாதங்கள் இதை சார்ந்து போய்க் கொண்டிருக்கிறது. தலைமைச் செயலர் எழுதிய கடிதத்தில் முதலில் எங்களுக்கான தவணைத் தொகையை வழங்குகள்.. நாங்கள் கேட்பது சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தரமான கல்வியை வழங்க வேண்டிய அதே வேளையில்… புதிய கல்விக் கொள்கையை புகுத்த வேண்டும் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, நாங்கள் கமிட்டி அமைத்து அந்த கமிட்டி பரிந்துரை செய்வதை பொறுத்தே முடிவெடுப்போம் என தெளிவாக சொல்லிவிட்டோம். எங்களது கமிட்டி அதை ஒப்புக்கொள்ளவில்லை என மத்திய அமைச்சரிடம் சொல்லிவிட்டு, அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணத்தைக் கொடுங்கள் எனச் சொல்லிவிட்டோம். எந்த காரணத்தைக் கொண்டும் கொள்கையை விட்டுக் கொடுத்து இதை பெறமாட்டோம். மத்திய அமைச்சருக்கே தெரியும்… நாங்கள் அதை ஒப்புக் கொள்ளவில்லை என்பது. கமிட்டியின் அறிக்கையை பொறுத்து நாங்கள் ஒப்புக் கொள்வோம்.
அந்த கமிட்டி ஒப்புக் கொண்டால் மட்டுமே என்று சொன்னோம். தரமான கல்வியை தரும் அதே வேளையில், அதில் உள்ள மறைமுக அஜெண்டாவை நாங்கள் தெரிந்து கொள்வோம் என தெளிவாக சொல்லிவிட்டோம். கமிட்டி ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, நாங்களும் ஒப்புக் கொள்ள மாட்டோம். ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசின் பாடப்புத்தகத்தைப் படிப்பதன் மூலமாகப் போட்டித் தேர்வுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்… எவ்வளவு பேர் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்கள் என்பதை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை கடந்து நமது பாடத்திட்டம் எப்படி உள்ளது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஒரு கமிட்டி போட்டு ஆய்வு செய்து பேசட்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில் நமது மாநில பாடப்புத்தகத்தில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது. மேலும், மாநில புத்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் நூலகங்களில் தயார் செய்து வருகிறார்கள். வேண்டுமானால் ஆளுநர் ஒரு நாள் நூலகத்திற்கு என்னுடன் ஆய்வுக்கு வரட்டும். அதன் பின்பு ஆளுநர் கருத்து சொல்லட்டும்” என்றார்.