இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானி, முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத்தள்ளி மீண்டும் இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரராகியிருக்கிறார். 2024-ம் ஆண்டுக்கான, ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் (Hurun India Rich List), ரூ.11.6 லட்சம் கோடி சொத்துமதிப்புகளுடன் அதானி முதலிடம் பிடித்திருக்கிறார்.
2020-ல் நான்காம் இடத்திலிருந்த அதானி, கடந்த ஆண்டு வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிவைக் கண்டபோதிலும், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் அவரின் சொத்துகள் 95 சதவிகிதம் உயர்ந்ததையடுத்து இந்தப் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார். தற்போது அதானி மற்றும் அதானி குடும்பத்தின் மொத்த சொத்துமதிப்பு சரியாக ரூ.11,61,800 கோடி.
அதானியின் இந்த வளர்ச்சி குறித்து Hurun Rich List அறிக்கையில், `அதானி மற்றும் அவரது குடும்பம், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து, இந்த ஆண்டின் இந்திய பணக்காரர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் கடந்த ஆண்டில் பங்கு விலைகளில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தைக் கண்டன. குறிப்பாக அதானி துறைமுகங்கள் 98 சதவிகித வளர்ச்சியைக் கண்டன.
அதோடு, ஆற்றல் சார்ந்த நிறுவனங்களான, அதானி எனர்ஜி, அதானி காஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி பவர், ஆகியவை சராசரியாகப் பங்கு விலையில் 76 சதவிகித வளர்ச்சி கண்டன’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், 2014-ல் ரூ.44,000 கோடி சொத்துமதிப்புகளுடன் 10 இடத்திலிருந்த அதானிதான், அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.11.6 லட்சம் கோடியாக உயர்ந்து இன்று முதலிடம் பிடித்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில், இந்தியாவின் மற்றொரு பெரும் தொழிலதிபர் அம்பானி ரூ.10.14 லட்சம் கோடி சொத்துமதிப்புகளுடன் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து, ஷிவ் நாடார் (HCL) ரூ.3.14 லட்சம் கோடி சொத்துமதிப்புகளுடன் மூன்றாம் இடத்திலும், சைரஸ் பூனவல்லா (Serum Institute of India) 2.89 லட்சம் கோடி சொத்துமதிப்புகளுடன் நான்காம் இடத்திலும், திலீப் ஷங்வி (Sun Pharmaceutical Industries) ரூ.2.49 லட்சம் கோடி சொத்துமதிப்புகளுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.