Haryana: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இஸ்லாமியர் கொலை; `யாரால் தடுக்க முடியும்?’- முதல்வர் கருத்து!

உலக அளவில் மாட்டிறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் இந்தியாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக, வைத்திருந்ததாகக் குறிப்பிட்ட கும்பலால் அடித்துக்கொல்லப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இப்படியான சூழலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில், ரயிலில் தனது மகள் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஹாஜி அஷ்ரஃப் முனீர் என்ற முதியவர், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

மாட்டிறைச்சி

அதேபோலவே, பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் ஹரியானாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீர் மாலிக் எனும் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார். சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றைச் சேகரித்து விற்றுப் பிழைப்பு நடத்திவரும் இவரை, பசுக் காவலர்கள் என்று கூறப்படும் குழுவைச் சேர்ந்த சிலர், பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வருமாறு அழைத்துச் சென்று அடித்தே கொன்றிருக்கின்றனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஏழு பேரை போலீஸார் கைதுசெய்து வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எப்படித் தடுக்க முடியும் என ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கைவிரித்திருக்கிறார்.

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி

இந்தச் சம்பவம் குறித்து பேசுகையில் இதனைத் தெரிவித்த முதல்வர் நயாப் சிங் சைனி, “பசு பாதுகாப்புக்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது இதனைக் கும்பல் படுகொலை என்று கூறுவது சரியல்ல. மேலும், இதில் எந்த சமரசமும் கிடையாது. பசுக்கள் மீது கிராம மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, இத்தகைய விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தால், அதை யார் தடுக்க முடியும்? இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும், இந்த சம்பவங்கள் துரதிஷ்டவசமானது என்றும் நான் கூற விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.