மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் நடந்த உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா, “அ.தி.மு.க ஆட்சியில் செயல்பட்ட தாலிக்குத் தங்கம், மடிக்கணினி வழங்குவது, அம்மா கிளினிக் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தி.மு.க ஆட்சி வந்த பின்பு நிறுத்தப்பட்டது.
அதே நேரம் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் என மக்களை பாதிக்கும் வகையில் தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு 500-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மாணவர்களும், இளைஞர்களும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் இன்று மருத்துவர்களாகி உள்ளனர்.
தி.மு.க அரசு வாக்குறுதி அளித்ததுபோல் அனைத்துப் பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும். தி.மு.க மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்றார்.