ஷம்பு கிராம எல்லையில் ஹரியானா விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 200 நாள்களை எட்டியுள்ள நிலையில் பெரிய அளவிலான போராட்டத்தை இன்று (சனிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுடன் இணைந்துள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். “உங்கள் மகள் உங்களுடன் நிற்கிறேன்” எனப் பேசி தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் ஹரியானா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உறுதியை அளிக்க வேண்டும்’ என்பதை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். டெல்லி நோக்கிய விவசாயிகள் பயணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய நிலையில் ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் நடுவே உரையாற்றிய வினேஷ் போகத், “விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன். நம் உரிமைக்காக நாம் நிற்க வேண்டும், நமக்காக வேறு யாரும் வரப்போவதில்லை. நம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்காக கடவுளை வேண்டிக்கொள்கிறேன். நம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளாமல் வீடு திரும்பாதீர்கள்” எனப் பேசினார்.
மேலும். “விவசாயிகள் இங்கே நீண்ட நாள்களாக அவர்களது உரிமைக்காக போராடுகின்றனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன். 200 நாள்களாகியும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. உரிமைக்காக குரல்கொடுக்கும் அவர்களைப் பார்க்கும்போது எங்களுக்கு கூடுதல் வலிமை கிடைக்கிறது.” எனவும் பேசினார்.
போராடும் விவசாயிகள், 2021 போராட்டம் குறித்து அவதூறாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கின்றனர்.
வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் இணைந்து தாக்கம் செலுத்த திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், விவசாயிகளின் தேர்தல் யுத்தி குறித்து வெளிப்படையான கருத்துக்கள் எதுவும் இல்லை!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88