UP: `ஆதரித்தால் பரிசு; அத்துமீறினால் சிறை..!’ இன்ஃப்ளூயன்ஸர்களை டார்கெட் செய்யும் யோகி அரசு

‘உத்தரப்பிரதேச புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை, 2024’ என்ற சர்ச்சைக்குரிய கொள்கை உத்தரப்பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

யோகி ஆதித்யநாத்

இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கையின்படி, உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசின் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பாராட்டும் விதமாக முகநூல், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யுடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

அதே நேரம், அரசை விமர்சித்து ஆட்சேபகரமான, ‘தேசவிரோத’ பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறது உத்தரப்பிரதேச புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை.

அகிலேஷ் யாதவ்

“எந்த சந்தர்ப்பத்திலும் அநாகரீகமாகவோ, ஆபாசமாகவோ, தேசவிரோதமாகவோ சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடக்கூடாது’ என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலாளரான சஞ்சய் பிரசாத் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்டிருக்கும் தனிநபர்கள் பலர், தங்களின் அரசியல் கொள்கைகளையும், கருத்துக்களையும் பெருவாரியான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். குறிப்பாக, அரசியில் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளைச் சேராமல் குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றுபவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார்கள். அது, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் போக்கு, ஆட்சியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

சமூக ஊடகங்கள்

‘மெயின்ஸ்ட்ரீம் மீடியா’ எனப்படும் பெருஊடகங்கள் சிலவற்றை ஆட்சியார்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கும் தற்போதிய நிலையில், மக்கள் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன. இதனால் அச்சப்படும் ஆட்சியாளர்கள் சமூகஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதில் ஒன்றுதான், உத்தரப்பிரதேசத்தில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் டிஜிட்டல் மீடியா கொள்கை.

உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசுக்கு ஆதரவாக செயல்படும் சமூகவலைத்தளங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் சமூகவலைத்தளங்களில் இயங்கிவருபவர்கள் அரசுக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் புதிய டிஜிட்டல் மீடியா கொள்கைக்கு யோகி அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதன்படி, யோகி அரசின் சாதனைகள், திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை தூக்கிப்பிடிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் பிரசாரம் செய்பவர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 8 லட்சம் வரை பரிசாக பெற முடியும்.

யோகி – மோடி

இந்த புதிய கொள்கையின் கீழ், அரசின் திட்டங்கள், சாதனைகளை முன்னிறுத்தி ட்வீட்கள், வீடியோக்கள், ரீல்ஸ் என பல வடிவங்களில் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்யும் ஏஜென்சிகள், நிறுவனங்களை அரசு பட்டியலிடவிருக்கிறது. இந்த வகையில், உத்தரப்பிரதேசத்திலும், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்நதவர்களுக்கு பெருமளவில் வருமானம் கிடைக்கும் என்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலாளரான சஞ்சய் பிரசாத்.

எக்ஸ் தளம், முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகிய தளங்களில் பெரியளவுக்கு இன்ஃப்ளூயன்ஸர்களாக இருப்பவர்களை, அவர்களின் நான்காகப் பிரிக்கிறார்கள். அவர்களின் ஃபாலேவர்கள், சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களை மாநில அரசு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவர்களின் பதிவுகளும், வீடியோக்களும், ரீல்ஸ்களும் எந்தளவுக்கு சென்றடைகிறதோ, அதன் அடிப்படையில் ரூ. 8 லட்சம், ரூ.5 லட்சம், ரூ. 4 லட்சம், ரூ. 3 லட்சம் என்று ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஒட்டுமொத்த டிஜிட்டல் மீடியாவையும் கைப்பற்ற பா.ஜ.க அரசு முயல்கிறது என்றும், அரசை விமர்சிப்பவர்களை சட்டத்தின் மூலம் அச்சுறுத்துகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. யோகி அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. ‘அரசுப் பணத்தில் சுய விளம்பரம் செய்துகொள்வது ஒரு வகையான ஊழல்’ என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்திருக்கிறார்.

இந்த சட்டம் குறித்த உங்கள் கருத்துகளை கீழே கமெண்டில் பதிவிடுங்கள் மக்களே..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88