மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகாமில் கலந்துகொண்டார் அமைச்சர் பி.மூர்த்தி.
கலெக்டர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் 134 மாணவர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி “வரி எய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம், தொழில் வரி ஏய்ப்பு செய்வர்கள் குறித்த சர்வே எடுத்து விவரங்களை சேகரிக்கிறோம். தொழில் செய்வதாக போலியாக சான்று வைத்துக்கொண்டு தொழில் செய்யாதவர்களை கண்டறிந்து வருகிறோம்.
வணிக வரித்துறையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.4000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, வணிகவரித்துறையில் ரூ. 1,42,000 கோடியும், பதிவுத்துறைக்கு ரூ. 23,000 கோடியும் இலக்கு வைத்துள்ளோம். நியாயமாக நேர்மையாக தொழில் செய்ய வேண்டும்.
பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை அரசுக்கு நேர்மையான முறையில் செலுத்த வேண்டும், தொழில் கடனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றவர், “தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் பதவி ஏற்பார்” என்றும் தெரிவித்தார்.