அண்ணாமலையின் டார்கெட் `அதிமுக’… அதிமுக டார்கெட் `அண்ணாமலை’ – அரசியல் கணக்கு தான் என்ன?!

நாணயம் வெளியீட்டு விழாவும் அரசியலும்..!

கலைஞர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு பா.ஜ.க தலைவர்களை தி.மு.க அழைத்திருந்தது. அன்றில் இருந்து அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான மோதல் நாளுக்கு, நாள் புதிய பரிமாணத்தை எட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி, “மத்திய தலைவர்கள் நாணயம் வெளியிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் கிடைக்கும் என அண்ணாமலை கூறுகிறார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை. அண்ணாமலை பிறப்பதற்கு முன்னாகவே எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் அண்ணாமலை கொண்டு வரவில்லை.

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா

பொய்களை மட்டுமே பேசுபவர்தான், தமிழக பா.ஜ.க தலைவராக உள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் இருந்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். ஏன் அது எங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட போது தெரியவில்லையா. அண்ணாமலைக்கு என்னை விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வேலை. அவர் வேறு என்ன செய்திருக்கிறார். மைக்கை கண்டால் அவருக்கு வியாதி. உடனே பேசத் தொடங்கிவிடுவார். எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்தக் கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. இவர் வேறு ஏதோ வழியில் பதவி பெற்றுள்ளார். அதை வைத்து இன்று தலை, கால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

காட்டமான அண்ணாமலை..!

இதையடுத்து பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பெட்டிங் ஏஜென்ட் கட்சியாக இருக்கிறது. பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். யாரையோ பிடித்து, உழைக்காமல் பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும். மைக்கை பார்த்தாலே பொய் பேசுவார் எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு நான் கருத்துச் சொல்ல வேண்டும். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் தி.மு.க அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி.

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

எனவே நீங்கள் நேர்மையைப் பற்றி எனக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். கூவத்தூரில் நடந்தது கட்சியின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வா?. அங்கு நடந்தது அலங்கோலம். டெண்டர் சிஸ்டத்தில் முதல்வரைத் தேர்வு செய்தார்கள். ஹைய்ஸட் பிட்டராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். பிட்டிங் என்றால் எந்த எம்.எல்.ஏ-வுக்கு மாசம், மாசம் எவ்வளவு என்ன பணம் கொடுக்க வேண்டும் என்பதுதான் கூவத்தூரில் நடந்த பிட்டிங் முறை. அதன்பிறகு தவழ்ந்து வந்து முதல்வர் பதவியைப் பிடித்தவர் எடப்பாடி” என்றார். அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அ.தி.மு.க தலைவர்கள் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழிசை கூட மறைமுகமாக அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி அண்ணன் மீது நான் வைத்த விமர்சனம் 100% சரி. ஒரு பாயிண்ட் பின்னால் போக மாட்டேன். தினமும் ஒரு முன்னாள் அமைச்சர் என்னை திட்டலாம். தற்குறி என்று சொல்லலாம். படிப்புக்கு போனால் கொச்சைப் படுத்தலாம். நான் செய்யக்கூடிய வேலையை கொச்சைப் படுத்தலாம். ஆட்டை வெட்டலாம். ஆனால் நான் கையைக்கட்டி உட்கார்ந்து கொண்டு அண்ணா மன்னித்துவிடுங்கள்.. உங்களுக்கு 40 ஆண்டு அனுபவம் இருக்கிறது. எனக்கு மூன்று ஆண்டுதான் அனுபவம் இருக்கிறது என சொல்வதற்காக நான் வரவில்லை.

தமிழிசை சௌந்தரராஜன் 

உட்கட்சியாக இருந்தாலும் சரி, வெளிக்கட்சியாக இருந்தாலும் சரி. எனது பாணி மாறாது. அரசியல் மாற்றத்துக்காக வந்திருக்கிறேன். நான் தலைவரான பிறகு தனியாக உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை சந்திருக்கிறோம். இவையெல்லாம் தனியாக கட்சி வளர வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் அனைத்து மூத்த தலைவர்களுக்கும் மதிப்பு அளிக்கிறேன். அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். அரசியலில் எனக்கு என ஒரு பாணி இருக்கிறது. எல்லாத்தையும் காப்பி அடிக்க ஆரம்பித்தால் மாட்டிக்கொள்வோம். கை, கால் பிடித்து பதவிக்கு வந்தேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இன்று பேசக்கூடிய தலைவர்கள் அன்று எங்கு போனார்கள். அந்த தலைவர்கள் பேசியிருக்கலாமே.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும். என் இதயம் இங்கே தான் இருக்கும். வெளிநாடு சென்றாலும் அரசியல் செய்வேன். ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும். பா.ஜ.க-வில் உறுப்பினர் சேர்க்கை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம். தேசிய அளவில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் ஹெச்.ராஜாவும் முதல் உறுப்பினராக பா.ஜ.க-வில் இணைவர்.

எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க-வின் தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தன. கட்சி வளர வேண்டும் என்றால் தனித்துத் தான் போட்டியிட வேண்டும். அரசியலில் மக்களின் பார்வை மாறிவிட்டது. 40 சதவீத வாக்காளர்கள் 39 வயதுக்குக் கீழ் இருக்கின்றனர். அ.தி.மு.க-வில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் டை அடித்துக் கொண்டால், இளைஞர்கள் ஆகிவிடுவார்களா?. மக்களிடம் பேசுவதிலும், செயலிலும்தான் இளமை இருக்கிறது” எனக் கொதித்தார்.

இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்தும் மீண்டும் கடுமையான விமர்சனம் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அழிவை நோக்கி அண்ணாமலை போகிறார் என்பதற்கான எடுத்துக்காட்டாகத்தான் அவருடைய பேச்சு இருந்தது. தரம் தாழ்ந்த பேச்சு. லாயக்கில்லாத ஒரு மாநிலத் தலைவரைத்தான் பா.ஜ.க பெற்றிருப்பது வருந்ததக்க, வேதனையான விஷயம். விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து அண்ணாமலை, அ.தி.மு.க பொதுச் செயலாளரை கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி, அ.தி.மு.க-வை விமர்சனம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

அண்ணாமலையைப் பொறுத்தவரை அவருடைய நிலைப்பாடு என்னவென்றால், அவர் ஒரு மாநிலத் தலைவரே இல்லை. அவர் பா.ஜ.க என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு ஒரு மேனேஜர். இந்த மேனேஜர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுகிறார். தேர்தல் காலத்தில், முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஒரு ரகசிய கூட்டணி என்று கூறியபோது, அதை எந்தக் காலத்திலும் அண்ணாமலை மறுக்கவில்லை. மாறாக, இன்றைக்கு பா.ஜ.க-வும், தி.மு.க-வும் ரகசிய கூட்டணியில் உள்ளனர். இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளும் ஒன்றாகி ரகசிய கூட்டணி அமைத்து அது பெரிய அளவுக்கு விவாதப் பொருளானது. இதனால், முதல்வர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அந்த மேடையை அண்ணாமலை அநாகரிகமாக பயன்படுத்தி உள்ளார். அண்ணாமலையின் தகுதி என்ன? அவர் ஒரு மூன்றாண்டு காலமாகத்தான் அரசியலில் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி பல்வேறு பொறுப்புகளை வகித்து முதல்வராக வந்தவர். அண்ணாமலையின் நிலையே ஒரு விட்டில் பூச்சி போன்றது. அதன் வாழ்க்கையே 7 நாட்கள்தான். இந்த அளவுதான் அவருடைய அரசியல் நிலை இருக்கிறது. ஆனால், இதை மறந்துவிட்டு, ஒரு பாரம்பரியமிக்க 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியை, 2026-ல் ஆட்சி அமைக்கவிருக்கிற ஒரு மாபெரும் இயக்கத்தை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு யோக்கியதை இருக்கிறதா? தகுதி இருக்கிறதா?. திராவிட இயக்கங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய அ.தி.மு.க-வை அண்ணாமலையால் எதுவும் செய்ய முடியாது” எனக் கொதித்தார்.

ப்ரியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “அண்ணாமலை, எடப்பாடி இடையேயானா மோதல் அ.தி.மு.க, பா.ஜ.க இடையில் நடக்கும் மோதல் இல்லை. அவர்கள் இருவருக்குள்ளும் உள்ள ஈகோ மோதல்தான் என்றுதான் சொல்ல வேண்டும். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜக பங்கேற்றது. அதை தி.மு.க, பா.ஜ.க இடையில் உறவு இருக்கிறது என எடப்பாடி அரசியலாக்கினார். இந்த கோபத்தில்தான் அண்ணாமலை பேசி வருகிறார். அ.தி.மு.க, பா.ஜ.க இடையில் கூட்டணி அமையாததற்கு அண்ணாமலைதான் காரணம் என்கிற கோபம் எடப்பாடிக்கு இருக்கிறது. இதையும் தாண்டி வெளியில் தெரியாமல் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது.

மேலும் கொங்கு மண்டலத்தில் யார் பெரியவர் என்கிற மோதலும் இருக்கிறது. நடந்து முடித்த தேர்தலில் கடைசி நேரம் வரையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக அகில இந்திய தலைமை விரும்பியது. ஆனால் எடப்பாடி தரப்பு அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தது. ஆனால் டெல்லி கேட்கவில்லை. அண்ணாமலை இன்னும் கொஞ்ச நாள் தான் மாநில தலைவராக இருப்பர் என கே.பி.முனுசாமி சொல்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க-வில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் பா.ஜ.க எதிர்ப்பாளர்கள். அவர்களே அண்ணாமலை இருக்க மாட்டார் என்று சொல்வதை பார்த்தால் அவர் இல்லாதபோது பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் இணைய வாய்ப்பிருக்கிறதோ என்கிற எண்ணம் வருகிறது. அதேநேரத்தில் வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பா.ஜ.க-வை தாக்கி பேசவில்லை. டெல்லி தலைமையும் அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்யவில்லை. இதன்மூலம் அ.தி.மு.க, பா.ஜ.க-வின் டெல்லி தலைமை இடையே உறவு இருப்பது தெரிகிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88