புதுச்சேரியில் ஒவ்வோர் ஆண்டும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 2024-24 ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு செய்தது. அதற்காக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், புதுச்சேரி மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் மனு தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், மின் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம். அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், சமூக அமைப்புகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருந்தது புதுச்சேரி அரசு.
இந்த நிலையில்தான், நிறுத்தி வைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு, கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 1 யூனிட் முதல் 50 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.1.45 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.1.95 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு நிரந்தர சேவைக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம் ரூ.3.25-ல் இருந்து, ரூ.4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு தற்போது ரூ.5.40 வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் ரூ.6.80-ல் இருந்து. ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வர்த்தக பயன்பாட்டில் உள்ள உயர் மின் அழுத்த (HD) லைனுக்கு தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.5.60 வசூலிக்கப்படுகிறது. அது ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல குறைந்தழுத்த தொழிலகங்களுக்கான கட்டணத்தை ரூ.6.35-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 11 கே.வி 22 கே.வி அல்லது 33 கே.வி இணைப்பினை பெற்றுள்ள HD தொழிற்சாலைளுக்கான கட்டணம் ரூ.5.45-ல் இருந்து ரூ.6-க்கும், 110 கே.வி, 132 கே.வி மின் இணைப்புகளை பெற்றுள்ள EHD தொழிற்சாலைகளுக்கான கட்டணம் ரூ.5.50-ல் இருந்து ரூ.6.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்களுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.33 வசூலிக்கப்படுகிறது. அது தற்போது, ரூ.5.75 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்புதான் பொதுமக்களையும், எதிர்க்கட்சிகளையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. மின் கட்டண உயர்வை கண்டித்து, மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறது அ.தி.மு.க. அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், “புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு, மக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்தும் சோதனை மாநிலமாக புதுச்சேரியை நடத்தி வருகிறது. ஏற்கெனவே உயர்த்திய கட்டண உயர்வை மக்களின் போராட்டத்தையடுத்து நிறுத்துவதாக தெரிவித்த அரசு, தற்போது ஜூன் 16-ம் தேதி உயர்த்தி அறிவிக்கப்பட்ட கட்டணம், மீண்டும் அதே கட்டண உயர்வில் வசூலிக்கப்படும் என்றும், அன்றைய தேதியிலிருந்து அரியர்ஸாக வரும் மாதங்களில் வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மோசடி செயல். தமிழகத்தில் எடப்பாடி அவர்களின் அ.தி.மு.க ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் உபயோகப்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அதற்கான மானியத் தொகையையும் அரசே செலுத்துகிறது. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்து, அதற்கான மானியத் தொகையையும் அரசே செலுத்த வேண்டும். அல்லது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை முழுமையாக அரசு ரத்து செய்யவேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி மட்டுமே நுகர்வோர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில்தான் மின் கட்டணம், 10% ஒழுங்கு முறை கூடுதல் கட்டணம், 1 கிலோவாட்டுக்கு 35 ரூபாய் வீடுகளுக்கு நிரந்தரக் கட்டணம், கடைகளாக இருந்தால் 1 கிலோ வாட்டுக்கு 200 ரூபாய் நிரந்தரக் கட்டணம், கால தாமதக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நுகர்வோர்களிடமிருந்து கட்டணம் பெறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மின் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளமும் மின் கட்டணத்தில் சேர்க்கப்பட்டு மக்களிடம் வசூலிக்கிறார்கள். மின் துறை தனியார் மயமாக்குதலுக்காக திட்டமிட்டு அடாவடித்தனமான கட்டண உயர்வுகளை மக்கள் மீது அரசு திணிக்கிறது. அரசின் இந்த தகாத செயலை அ.தி.மு.க மக்களின் துணையோடு முறியடிக்கும்” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவரும், புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவா, “மின்துறையை தனியார் மயமாக்க கூடாது என்று மின்துறை ஊழியர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்ததால், அந்த முயற்சியில் இருந்து பின் வாங்கியது அரசு. ஆனால் தற்போது அதற்கு பழிவாங்கும் விதமாக, மின்கட்டணத்தை உயர்த்தி, தாங்கள் மக்கள் விரோத அரசுதான் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். அதற்கு மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்தை துணைக்கு அழைப்பது இவர்களின் கையாலாகாதத்தனத்தை காட்டுகிறது. கடந்த ஜூன் மாதம் அரசு இந்த முயற்சியை எடுத்த பொழுதே மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பின்வாங்கியவர்கள் மீண்டும் கட்டண உயர்வு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் ஒன்றிய அரசுக்கு ஒத்து ஊதுவதை புதுச்சேரி அரசு நிறுத்த வேண்டும். ஒருபுறம் இரட்டை இன்ஜின் ஆட்சி என்று கூறிக்கொண்டு மறுபுறம் இரு அரசும் இணைந்து மக்களை வாட்டி வதைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் வருமானத்தில் பெருமளவு மின் கட்டணமே பிடுங்கிவிடும் அளவிற்கு இந்த அரசு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் பா.ஜ.க அமைச்சர்கள் எந்த அளவிற்கு மக்கள் மீது வெறுப்பாக உள்ளனர் என்பதை காட்டுகிறது. வாக்களிக்காத மக்களை எந்த விதத்திலாவது பழிவாங்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இதனை புதுச்சேரி திமுக வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் இதனை கண்டித்து வருகின்ற 2-ம் தேதி புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று இந்த அரசை எச்சரிக்கிறோம்” என்றார்.
அதேபோல மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன், “25 ஆயிரம் கோடி சொத்துள்ள அரசு துறையான மின்துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு பொதுமக்கள், மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், வணிகர்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த மின்கட்டண உயர்வு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். அரசு உரிய முயற்சி செய்து மின் கட்டண உயர்வைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது. எனவே, முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்” என்கிறார்.