`மத்தியில் எதிர்த்த திமுக, மாநிலத்தில்… அரசு செய்வது சரியா?!’ – கொதிக்கும் அரசு ஊழியர் அமைப்புகள்

மத்திய அரசின் இணைச்செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ‘லேட்டரில் என்ட்ரி’ முறையில் வெளியாட்களை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், லேட்டரல் என்ட்ரி தொடர்பான அறிவிக்கையை யு.பி.எஸ்.சி வாபஸ் பெற்றது. லேட்டரல் என்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முதன்மையானவராக இருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தலைமைச்செயலகம்

தற்போது, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு மீதும் பணி நியமனங்கள் தொடர்பான விவகாரத்தில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஸ்டாலின் அரசு, 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அப்போது முதலே தமிழக அரசின் துறைகளில் ‘ஆலோசகர்கள்’ நியமனங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாக அரசு ஊழியர் அமைப்புகள் கூறுகின்றன.

தொடக்கக் காலத்தில் ஒரு சில துறைகளில் நடைபெற்ற ஆலோசகர்கள் நியமனம், தற்போது எல்லா துறைகளிலும் நடைபெற்றுவருகிறது. இதற்கு முன்பு அ.தி.மு.க ஆட்சியிலும் இதுபோன்ற நியமனங்கள் இருந்திருக்கின்றன. பெரும்பாலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், ‘எந்த வரைமுறையும் இன்றி தி.மு.க ஆட்சியில் நியமனங்கள் நடைபெறுகின்றன. ஊதிய நிர்ணயத்துக்கு எந்த வழிகாட்டல்களும் பின்பற்றப்படுவதில்லை’ என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது..

பிரதமர் மோடி

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. அதன் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி மூலமாக தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணியாளர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அவர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றிவருகிறார்கள். அவர்களுக்கான முக்கியத்துவமும், அவர்களின் திறமையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆலோசகர்களை வைத்து அரசு நிர்வாகத்தை நடத்துகிறார்கள். இதை ஏற்க முடியாது என்று அரசு ஊழியர் அமைப்புகள் விமர்சிக்கின்றன.

லேட்டரல் என்ட்ரி‘ மூலமாக இணைச்செயலர் உள்ளிட்ட 45 உயர் பதவிகளுக்கு யு.பி.எஸ்.சி அறிவிக்கை வெளியிட்டவுடன், ‘இதனால் இடஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது’ என்ற குரல் எழுந்தது. சமூகநீதி புறக்கணிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், ‘தமிழக அரசுத் துறைகளில் நடைபெறும் ஆலோசகர் நியமனங்களிலும் இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படுகிறது’ என்கிறார் தலைமைச்செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன். அவர் இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.

நாடாளுமன்றம்

அதாவது, ‘ஆலோசகர்கள் என்ற பெயரில் தமிழக அரசுத் துறைகளில் நியமிக்கப்படுபவர்கள், சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதற்கான பயிற்சியைப் பெற்று, பல்வேறு முதலாளித்துவ நிறுவனங்கள் மூலம் பல்வேறு வழிகளில் மாநில அரசுத் துறைகளுக்குள் வருகிறார்கள். இது அபாயகரமான போக்கு’ என்கிறார் கு.வெங்கடேசன்.

தமிழக அரசில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த காலிப்பணியிடங்களை நிரப்பாமல் அரசு நிர்வாகத்தை நடத்துவதற்கு ஆலோசகர் நியமனங்கள் மறைமுகமாக உதவுகின்றன என்ற குற்றச்சாட்டும் அரசு ஊழியர் அமைப்புகளால் வைக்கப்படுகின்றன.

தலைமைச் செயலகம்

2014-ம் ஆண்டு தேர்தலில், ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் அந்த வாக்குறுதியை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தி.மு.க-வினர் முன்வைத்துவருகிறார்கள்.

ஆனால், 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, அரசு வேலைவாய்ப்பு, அரசுப் பணி நியமனங்கள் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க அளித்தது. அந்த வாக்குறுதிகள் கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அ.தி.மு.க ஆட்சியிலும் இதுதான் நிலைமை என்பது வேறு விஷயம்.

எடப்பாடி பழனிசாமி

‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, சமூகநீதியைப் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். ஆலோசகர்கள் என்ற பெயரில் நடைபெறும் நியமனங்களை நிறுத்திவிட்டு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகயை தி.மு.க அரசு எடுக்க வேண்டும் என்கின்றன அரசு ஊழியர் அமைப்புகள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88