`பெண்கள் சத்தமாக பேசினால் குற்றமா?’ – தாலிபனின் புதிய சட்டம்… கலங்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

பல ஆண்டுகள் போராலும், ஏழ்மையாலும், நிலையான அரசு இல்லாததாலும் அல்லல்பட்ட நாடு ஆப்கானிஸ்தான். 1994 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபன் அமைப்பு, இராண்டாவது முறையாக 2021ல் ஆட்சியைக் கைப்பற்றியது.

தாலிபனின் ஆட்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே படிப்படியாக ஆப்கான் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தாலிபனின் சமீபத்திய சட்டங்கள் மனித உரிமைகள் ஆணையத்தை திகிலடையை வைத்துள்ளன. “களங்கமும் நல்லொழுக்கமும்” என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த அதன் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா அனுமதி வழங்கியுள்ளார். இந்தச் சட்டம் பெண்கள் தங்களது முழு உடலையும் முகத்தையும் தடிமனான துணியால் மறைக்கக் கட்டளையிடுகிறது. இப்படி ஆடை அணிவதால் ஆண்கள் சலனமடைவதும் பாவச் செயல்களில் ஈடுபடுவதும் தவிர்க்கப்படும் என்கிறது சட்டம்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, பெண்களின் குரலும் கூட பாவத்தைத் தூண்டும் என்கிறது இந்தச் சட்டம். பெண்கள் பொதுவெளியில் சத்தமாகப் பேசக் கூடாது என்றும், வீட்டுக்குள் இருந்து பாடினாலே, இசைகளை வாசித்தாலோ வெளியில் சத்தம் கேட்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்

பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது தங்களது தலைமுடி, முகம், உடலை மறைக்க வேண்டும். பெண்களின் உடை லேசானதாகவோ, குட்டையாகவோ, இறுக்கமாகவோ இருக்கக் கூடாது. குரல் வெளியில் கேட்கக் கூடாது என அடுக்கடுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆண்கள் பொதுவெளிக்கு வரும்போது தொப்புள் முதல் முழங்கால் வரை மறைக்கும்படி ஆடை அணிய வேண்டும் எனவும் கூறுகிறது. மேலும், எந்த ஒரு உயிரையும் புகைப்படம் எடுப்பதும், புகைப்படம் வைத்திருப்பதும், பாடல் கேட்கும் கருவிகள் வைத்திருப்பதும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்

அதுமட்டுமின்றி பெண்கள் தங்களது ரத்த பந்தம், திருமண உறவு இல்லாத ஆண்களை நேராகப் பார்க்கக் கூடாது. வெளியில் வரும்போது தகுதியான ஆண் துணையுடன் வரவேண்டும். அப்படி ஆண் துணையில்லாமல், உடை கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வரும் பெண்ணை டாக்ஸியில் ஏற்றினால் டாக்ஸி ஓட்டுநரும் தண்டிக்கப்படுவார் என்கிறது புதிய சட்டம்!

பெண்கள் மற்றும் சிறுமியர் இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் தாலிபன் அதிகாரிகளால் இந்த புதிய சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். இந்த சட்டங்கள் அனைத்தும் ஷரியத் சட்ட அடிப்படையில் ஒழுக்கநெறி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Mir Abdul Wahid Sadat
Mir Abdul Wahid Sadat

இந்தச் சட்டங்கள் குறித்து ஐரோப்பா ஆப்கான் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மிர் அப்துல் வாகித் சதாத், ருக்‌ஷனா மீடியாவில் பேசியதாவது, “இந்த புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களில் இருந்து முரண்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளிலிருந்தும் விலகியிருக்கிறது. இஸ்லாத்தின்படி நல்லொழுக்கம் என்பது எப்போதும் வலிமை, வற்புறுத்தல் அல்லது கொடுங்கோன்மை மூலம் கொண்டுவரப்படுவதில்லை. இந்தச் சட்டம் ஆப்கான் சட்டங்களை மட்டுமல்லாமல், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் அனைத்து 30 விதிகளையும் மீறுகிறது.” என்கிறிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் ஒழுக்கநெறி அமைச்சகம், “இந்தச் சட்டத்தில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது” என உறுதியாகக் கூறியுள்ளது.

“இது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை இருளச்செய்கிறது” என ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவர் கவலைத் தெரிவித்திருக்கிறார்.

Fawzia Koofi - மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
Fawzia Koofi

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் முதல் பெண் துணை சபாநாயகரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான ஃபவ்சியா கூஃபி (இப்போது டென்மார்கில் வசிக்கிறார்), “இது பெண்களின் உரிமைக்கு எதிரான போர்” என்கிறார். அவர் கூறியதாவது, “தலிபான் அரசாங்கத்திற்கு எந்தவிதமான சட்டபூர்வமான தன்மையும் இல்லை, பெண்களை அடக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள் அவர்களின் பெண் வெறுப்பின் வெளிப்பாடே ஆகும்” என்கிறார்.

தாலிபான்களின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பாத சர்வதேச சமூகங்கள் இந்த கொடுங்கோன்மையில் பங்கு வகிக்கின்றன என பல செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர். தாலிபான்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல்கொடுக்காமல், பிற நாடுகள் அவர்களுடனான உறவை பலப்படுத்த விரும்புகின்றன என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் பெண்கள்

இந்த ‘களங்கமும் நல்லொழுக்கமும்’ சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னரே தாலிபான்களால், பெண்கள் பள்ளிகளுக்கு செல்லவும், பொதுவெளியில் நடமாடவும், ஊதியம் பெற்று பணியாற்றவும் தடை செய்யப்பட்டிருந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்களுக்கு கசையடி கொடுத்தல் மற்றும் கல்லெறிதல் போன்ற தண்டனைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக தலிபான்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88