திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்தவர் மீனா. இவர் பாதுகாத்து வைத்திருந்த ஆவணம் ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தினார். ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், இந்த ஆவணம் 19 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் என்பது தெரியவந்தது.
இந்த ஆவணத்தை ஆய்வு செய்த நாராயணமூர்த்தி, “முத்திரைத்தாள் 10.5 செ.மீ., அகலம், 16.5 செ.மி., உயரம் கொண்ட இந்த ஆவணம் பாலசமுத்திரம் ஜமீன்தாரிணி சின்னோபளம்மாவால் எழுதப்பட்டது. தன் ஜமீன் பண்ணையின் 23 ஏஜெண்ட்கள் பெயர்களை எழுதி அதை மேனேஜர்களின் விவரப் பத்திரம் என பிரிட்டிஷாரின் கிழக்கிந்தி கம்பெனியிடம் பதிந்து வைத்துள்ளார். இதில் 31 வரிகள் எழுதப்பட்டு ஜமீன்தாரிணி சின்னோபளம்மாள் கையெழுத்து போடப்பட்டுள்ளது.
ஈஸ்வர ஆண்டு மாசி 9 ஆம் தேதி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது இந்த பத்திரம் 1818 பிப்ரவரி 21 ஆம் தேதி எழுதப்பட்டது ஆகும். இந்த பத்திரத்தின் மேல் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் வட்டவடிவிலான முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இன்டாக்ளியோ எனும் அச்சு முறையில் பத்திரத்தாளில் இரண்டணா என தமிழிலும், தோஅணா என உருதுவிலும், இரடுஅணா என தெலுங்கிலும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவு கிழக்கிந்திய கம்பெனியின் கருவூலம் மூலம் செய்யப்பட்டிருக்கிறது.
பத்திரத்தில் உள்ள 23 பெயர்களின் பின்னே கவுண்டன், தேவன், செட்டி, நாயக்கன், பிள்ளை, அய்யன் என பல ஜாதி பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேல்ஜாதி கீழ்ஜாதி என்ற பாகுபாடு இல்லாமல் பட்டியலின சமூக பெயர்கள் முதலிலும் பின்னே பிறஜாதி பெயர்களும் பாரபட்சமின்றி பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பத்திரத்தை எழுதிய சின்னோபளம்மாவின் கணவர் ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையால் பிடிக்கப்பட்டு, சென்னையில் சிறை வைக்கப்பட்டார்.
சிறையில் அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவியான சின்னோபளம்மா, கிழக்கிந்திய கம்பெனியால் பெயரளவுக்கு ஜமீன்தாரிணி ஆக்கப்பட்டுள்ளார்.
ஆனால், ஜமீனின் உண்மையானஆட்சி அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்துள்ளது. கம்பெனியிடம் இருந்து மாதந்தோறும் 30 பொன் வராகனை சின்னோபளம்மா சம்பளமாகப் பெற்றுள்ளார். சின்னோபளம்மா இறந்தபிறகு கம்பெனியின் வாரிசில்லா சட்டம் மூலம் பாலசமுத்திரம் ஜமீன் நேரடியாக கம்பெனி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது” என்றார்.