வெடித்த `வார்த்தை’ யுத்தம்
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய `கலைஞர் என்னும் தாய்’ புத்தக வெளியிட்டு விழா நடந்து முடிந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பேச்சுதான் இந்த சர்ச்சைக்கு ஆரம்பப் புள்ளி. ரஜினி பேசுகையில், “எல்லாம் ஓல்ட் ஸ்டூடெண்ட்டா இருக்காங்க. எல்லாருமே ரேங்க் வாங்கி இருக்குறவங்க. அதுலயும் துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கார். அவர் கலைஞர் கண்ணுலையே விரலை விட்டு ஆட்டுனவர். ஹெட்ஸ் ஆப் டூ யூ ஸ்டாலின் சார்” என்று பேச, அடுத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கவலைப்படாதீர்கள்… நான் சுதாரிப்பாக இருப்பேன்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
அடுத்ததாக ஒரு கட்சி விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக-வில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்திக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்ல வேண்டும்” என்று சீனியர்கள் குறித்து நடிகர் ரஜினி பேசியதைச் மேற்கோள்காட்டிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி சொன்ன கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன், “பல்லுப்போன நடிகரெலாம் இன்னும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகுதா?” என தாக்கி பேசினார். இதுகுறித்து ரஜினிகாந்த், “துரைமுருகன் எனது நண்பர். அவர் என்ன சொன்னாலும் எங்கள் நட்பு தொடரும்” என்று பதில் சொல்லிவிட்டார். அடுத்ததாக இதுகுறித்து துரைமுருகன், “நகைச்சுவையாகப் பேசியதை பகைசுவையாக்க வேண்டாம்” என்று சொல்லி இந்த விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கடுகடுத்த மேலிடம்!
உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து திமுக சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “மேடையில் துரைமுருகன் குறித்து ரஜினி பேசிய கருத்துக்கள் எதையுமே துரைமுருகன் ரசிக்கவில்லை. அதிலும், ரஜினியின் கருத்தை வழிமொழிவதுபோல முதல்வர் பேசியது அவரின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் துரைமுருகன். இந்த வருத்தத்திலிருந்தவர்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது சடாரென அப்படி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார். துரைமுருகன் சொன்ன கருத்து கட்சித் தலைமையில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் தலைவருக்கும் சென்றது. தலைவர் ஸ்டாலின் துரைமுருகனின் கமெண்ட்டை ரசிக்கவில்லை எனத் தெரிகிறது.
`அவ்வளவு பெரிய நடிகர் நம்ம நிகழ்ச்சிக்கு வந்து தலைவர் பத்தி பேசி பெருமைப்பட வைத்திருக்கிறார். இவரு எப்படி பண்ணது சரியா?’ என்று மூத்த நிர்வாகிகளிடம் தலைவர் கடிந்துகொண்டுள்ளார். அடுத்ததாக துரைமுருகனுக்கே போன் செய்து, `நீங்க செஞ்சது ரொம்பவே தப்பு. அப்படிப் பேசியிருக்கக் கூடாது’ என்று பேசி இருக்கிறார். துரைமுருகன் காரணம் சொன்னாலும் எதிர்முனையிலிருந்த தலைவர் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்கிறார்கள். துரைமுருகனும் வேறு வழியில்லாது, ரஜினியை அழைத்துத் தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்திருந்திருக்கிறார். அதற்கு அடுத்ததாகவே துரைமுருகன் எனது நண்பர் அவர் என்ன பேசினாலும் வருத்தமில்லை என்பதுபோல ரஜினி பேசிய சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது.
வருத்தத்தில் சீனியர்கள்!
ஏற்கனவே ரஜினி பேசியதில் அப்செட்டில் இருந்த துரைமுருகனுக்கு, முதல்வரே அழைத்து வருத்தம் தெரிவியுங்கள் என்று சொன்னதில் மேலும் பெரிய வருத்தமாம். இந்நேரம் கலைஞர் இருந்திருந்தால் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா என்று இன்னொரு சீனியரிடம் புலம்பித் தீர்த்திருக்கிறார் துரைமுருகன்.
முன்னதாக உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்ற பேச்சு வந்தது. அந்த சமயத்திலேயே துரைமுருகன் ஒரு துணை முதல்வருக்குப் பதிலாக இரண்டு துணை முதல்வர் பொறுப்பை உருவாக்கி எனக்கும் கொடுக்கவேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம். இந்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை. இந்த காரணத்தினால்தான் துணை முதல்வர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதாகவும் அறிவாலய வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. ஏற்கனவே கட்சியில் உள்ள பல சீனியர் அமைச்சர்களுக்கும், உதயநிதிக்கும் சீனியர் ஜூனியர் விவகாரத்தில் உரசல் இருக்கிறதாம்.
மூத்த அமைச்சர்களின் பவரை குறைப்பதற்கு உதயநிதி டீம் தனியொரு வேலைகளைச் செய்வதாக மூத்த அமைச்சர்கள் பலரும் வருத்தத்திலும், ஆதங்கத்தில் இருக்கிறார். இதில், சமீபத்தில் உதயநிதி ரஜினி பேசியதைச் சொல்லி சீனியர்கள் வழிவிட்டு ஜூனியர்களை வழிநடத்திச் செல்லவேண்டும் என்று பேசியதை சீனியர்கள் ரசிக்கவில்லை. சீனியர் – ஜூனியர் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. வெளிநாடு செல்லும் சமயத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்து கிளம்பியிருப்பதை நினைத்து தலைவரும் கவலையிலிருக்கிறார். அதன் ஒருபகுதியாகவே அவர் எழுதிய கடிதத்தில், “ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம் – சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்திச் செயலாற்றுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். சீனியர்கள் அனைவரையுமே அழைத்துப் பேசவும் செய்திருக்கிறார். தற்போதைக்கு இந்த பஞ்சாயத்து ஓரளவுக்கு ஓய்ந்துவிட்டது என்றுதான் நாங்கள் நம்புகிறோம்” என்றார்கள் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88