கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பா.ஜ.க ஆதரவு போராட்டம் என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறை தண்ணீர் பீய்ச்சி அடித்தல், பீரங்கி, கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க, இன்று 12 மணி நேரம் “பங்களா பந்த்” போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் பிரியங்கு பாண்டே, இன்று மேற்கு வங்கத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பிரியங்கு பாண்டே செய்தியாளர்களிடம், “இன்று நான் எங்கள் தலைவர் அர்ஜுன் சிங்கின் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தேன்… நாங்கள் சிறிது தூரம் சென்றதும், பட்பரா நகராட்சியின் ஜெட்டிங் மிஷின் மூலம் சாலை தடுக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்ததும் எங்கள் கார் நின்றது. அப்போது சுமார் 50-60 பேர் வாகனத்தை சூழந்தனர். குறைந்தது ஏழு பேர் எங்கள் வாகனத்தின் மீது குண்டுகளை வீசினர். ஆறு முதல் ஏழு முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது… இது திரிணாமுல் அரசு மற்றும் காவல்துறையினரின் கூட்டுச் சதி. இதில், எங்கள் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.” எனக் குறிப்பிட்டார்.